1218.

     நண்ணும் வினையால் நலிகின்ற நாயடியேன்
     எண்ணும் சுகாதீத இன்பமே அன்புடையோர்
     கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே
     பெண்ஒருபால் வாழும்உருப் பெற்றிதனைக் கண்டிலனே.

உரை:

     கணந்தோறும் உண்டாகின்ற வினைகளால் மெலிகின்ற கீழ்ப்பட்ட அடியவனாகிய யான், சான்றோரால் நினைக்கப்படுகின்ற சுகநிலைக்கு அப்பால் நிலவும் இன்பமே, மெய்யன்பர்களின் கண்ணும் கருத்தும் களிக்க எழுந்தருளுகிற கற்பகமே, உமையம்மையாகிய பெண்ணை ஒருபக்கத்தே கொண்டு விளங்கும் நின் திருவுருவ நலத்தைக் காண ஆசைப் பட்டேனாயினும், காணப்பெற்றிலேன். எ.று.

          வினை யென்பது மனம், வாய், மெய் என்ற மூன்றன் நினைவு சொல் செயல்களின் நிகழ்வாலும் நிகழாமையாலும் கணந்தோறும் தோன்றிய வண்ணமிருத்தலால், “நண்ணும் வினையால்” என வுரைக்கின்றார். “இருவினை யென்ப தென்னைகொல் (எனின்) அருளிய மனமே காயம் வாக்கெனும் மூன்றின், இதமே அகிதமெனும் இவை” (இருபா. 14) என அருணந்தி சிவனார் உரைப்பது காண்க. வினை நிகழும் போதே பயனும், அப் பயனை நுகரும் உரிமையும் உடன் தோன்றி நோய்க்குக் காரணமாதலால், “வினையால் நலிகின்ற நாயடியேன்” என நவில்கின்றார், நாய் - ஈண்டுக் கீழ்மைப் பொருள்பட வந்தது. மனவெல்லைக்கு அகப்பட்ட குணதத்துவ சுகநிலையே எண்ணப்படுவ தன்றி, அதற்கு அப்பாலாயுள்ள தத்துவாதீத சிவானந்தநிலை யன்மையின் அதனை, “எண்ணும் சுகாதீத இன்பம்” எனக் குறிக்கின்றார். அன்பர் ஞானிகளாதலால், அவருடைய கருவி கரணமனைத்தும் ஞானமாய் இன்பம் சுரந்து நிற்பது பற்றி, “கண்ணும் கருத்தும் களிக்க வரும் கற்பகமே” என்று கனிந்துரைக்கின்றார். ஒருவனாகிய திருவடிவில் ஒருபால் பெண்ணமரும் நீலமேனியும், ஒருபால் ஆண்மைக் கூறமையும் பொன் மேனியும் உற்றுக் காண்பார்க்கு வியப்பும் மதிமைசான்ற மகிழ்ச்சியும் நல்குவது காண விழைவு மிகுந்தமை தோன்ற, “பெண்ணொருபால் வாழுமுருப் பெற்றிதனைக் கண்டிலனே” என்று புலம்புகின்றார்.

     இதனால், நீல மேனி மங்கை பங்கனாகிய திருவுருக் காண விழைந்தமை விளம்பியவாறாம்.

     (6)