1219.

     தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன்
     இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே
     அவ்வண்ண மான அரசே அமுதேநின்
     செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே.

உரை:

      பகையாய் நின்று மயக்கும் மாயா காரிய வுலகிற் பெறலாகும் இன்பங்களாற் செம்மாந்திருக்கும் சிறியவனாகிய அடியேன், இத் தன்மையதென அறிதற் கொண்ணாத பெரும்பொருளே, அத்தன்மையதான அருளரசே, அமுதமே, நின் சிவந்த திருமேனிப் பொலிவுத் திறங்களைக் காணும் பேறின்றி யுளனாயினேன். எ.று.

     அறிவை மயக்கிச் செயலாற்றலைச் சிறுமைப்படுத்தலின், மாயையைத் “தெவ்வண்ண மாயை” என்கின்றார். தெவ் - பகை. தெவ்வண்ணம் - பகைமைப் பண்பு. மாயை - ஈண்டு ஆகு பெயராய், அதன் காரியமாகிய உலக போகங்களைக் குறிக்கிறது. செம்மாத்தல் - பெருமகிழ்ச்சியால் மயங்குதல், அடியார் பலருள்ளும் சிறியவன் என்றற்குச் “சிற்றடியேன்” என்று கூறுகின்றார். இவ்வண்ணத்தன் என்று அறியவோ காட்டவோ இயலாத இயல்பினனாதலால், “இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே” என மொழிகின்றார். “இன்னவுரு இன்னநிறம் என்றறிவதேல் அரிது” (வைகா) என ஞானசம்பந்தரும், “இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே” (வினாவிடை) என நாவுக்கரசரும், “இன்ன தன்மைய னென் றறியொண்ணா எம்மான்” (ஆரூர்) என நம்பியாரூரரும் கூறுவன காண்க. வான்பொருள் - பெரும் பொருள்; இதனையே பெரிய பொருள் எனவும், பரம் பொருள் எனவும் பெரியோர் உரைப்பர். இத்தன்மையதென அறிய வொண்ணாத அருளரசு என்பார், “அவ்வண்ணமான அரசே” என்று இயம்புகிறார். நினைக்கும் நெஞ்சினும் ஓதும் நாவினும் தேனூறுதலின், “அமுதே” என்கின்றார். சிவமூர்த்தி செம்மேனி யம்மானாவது பற்றி, அதனைக் காண வுண்டாகிய வேட்கை மிகுதியை, “செவ்வண்ண மேனித் திறங் காணப் பெற்றிலேனே” என வருந்துகிறார்.

          இதனால், சிவத்தின் செம்மைத் திருமேனி நலம் காண விழைந்தமை விளம்பியவாறாம்.

     (7)