1220.

     அல்வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாயடியேன்
     சொல்வைத்த உண்மைத் துணையே இணைத்தோள்மேல்
     வில்வத் தொடைஅணிந்த வித்தகனே நின்னுடைய
     செல்வத் திருவடியின் சீர்காணப் பெற்றிலனே.

உரை:

      இருள் நிறைந்த மனத்தைக் கொண்டு இடருற்று அலைகின்ற நாயிற் கீழாய அடியவனாகிய யான், தம்முடைய சொற்களில் பொருளாக வைத்து உயர்ந்தோர் போற்றும் மெய்ம்மைத் துணைவனே, இரண்டாகிய தோள்களில் வில்வ மாலை யணிந்த ஞானவானே, நின்னுடைய திருவருட் செல்வத்தை யருளும் திருவடியின் சிறப்பைக் காண ஆசைப்பட்டேன்; இன்னமும் கண்டிலேன். எ.று.

     அல் - இருள்; ஈண்டு அறியாமையைச் செய்யும் மலவிருள் மேற்று. இருள்படிந்த நெஞ்சு அறிவொளியின்றித் துன்பநினைவுகளால் நோய்மிக்கு வருந்துவது பற்றி, “அல்வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாயடியேன்” எனத் தம்மைக் குறிக்கின்றார். உண்மை ஞானத்தால் உயர்ந்த பெருமக்கள் பரம்பொருள் பொருளாக வல்லது ஒரு சொல்லும் சொல்லாராதலால், “சொல் வைத்த உண்மைத் துணையே” என வுரைக்கின்றார். அதனால், இறைவனைச் “சொற்றுணையே” என்று சொல்லித் துதிக்கின்றார்கள். வில்வம், பண்டைத் தொகை நூல்களில் வில்லம் என வழங்கும் பணிந்து வணங்குவார்க்குப் பல்வகை வளங்களை நல்குதலின் “செல்வத் திருவடி” எனச் சிறப்பிக்கின்றார்.

     இதனால், திருவடிச் சீர் காண விழைந்தமை கூறியவாறாம்.

     (8)