1221.

     பொத்தேர் மயலால் புழுங்குகின்ற பொய்யடியேன்
     கொத்தேர் செழுங்கொன்றைக் குன்றமே கோவாத
     முத்தே எவர்க்கும் முழுமுதலே முத்திக்கு
     வித்தேநின் பொன்னடிக்கீழ் மேவிநிற்கக் கண்டிலனே.

உரை:

      குற்றம் பொருந்திய உலக மயக்கத்தால் வருத்த மிகுகின்ற பொய் நிறைந்த அடியவனாகிய யான், கொத்தாக மலர்கின்ற செழித்த கொன்றைகளையுடைய குன்று போல்பவனே, கோக்கப்படாத முத்தமே, எத்தவத்தோர்க்கும் முழுமுதலாகும் பெருமானே, முத்திக்குக் காரணமானவனே, நின்னுடைய திருவடி நீழலில் விரும்பியிருக்கும் நெறிகாணாதிருக்கின்றேன். எ.று.

     பொத்து - குற்றம். “போற்றினும் பொத்துப்படும்” (குறள்) என்பது காண்க. குற்றங்கள் உண்டாவதற்கு மயக்கம் காரணமாதலால், “பொத்தேர் மயல்” என்று குறிக்கின்றார். மண்ணிற் பிறந்தார்க்கு முற்றவும் கடியலாகாத குற்ற மூன்றனுள் மயக்கம் ஒன்று எனத் திருவள்ளுவர் கூறுவது காண்க. புழுங்குதல் - வெதும்புதல். பொய்ம்மை நிறைந்தேனாயினும் நின் திருவடியை மறவாதவன் என்ற கருத்துத் தோன்றப் “பொய்யடியேன்” எனப் புகல்கின்றார். கொத்தாகப் பூப்பதனால் “கொத்தேர் கொன்றை” எனல் வேண்டிற்று. முடியினும் தோளிலும் மார்பிலும் கொன்றைமலரே கிடந்து காட்சி நல்குவதால், “கொன்றைக் குன்றமே” என்று கூறுகின்றார். கோக்கப்படும் முத்து துளைக்கப்படுதலின், அதனின் வேறுபடுத்தற்குக் “கோவாத முத்தமே” எனப் புகழ்கின்றார். மக்களாலும் தேவர்களாலும் தொழப்படும் தேவர் யாவற்கும் முதற்பரம்பொருள் என்பது விளங்க, “எவர்க்கும் முழு முதலே” எனவும், எத்திறத்தோர்க்கும் முத்தி நல்கும் முதல்வனாதலால், “முத்திக்கு வித்தே” எனவும், விளம்புகின்றார். சிவன் சேவடிக்கீழ்ச் சென்று செம்மாந்திருக்கும் செம்மை நிலையையே பெரியோர்கள் விரும்புகின்றமையின், “பொன்னடிக்கீழ் மேவிநிற்கக் கண்டிலனே” என்று சொல்லி இரங்குகின்றார். “சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்கிறு மாந் திருப்பன் கொலோ” (அங்க) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.

     இதனாற் சிவன் சேவடிக்கீழ் நிற்கும் இன்ப நிலை விழைந்தமை விளம்பியவாறாம்.

     (9)