60. திருவருட் கிரங்கல்

    அஃதாவது சிவனது திருவருளைப் பெறல் வேண்டி மனமுருகி வருந்தி முறையிடுவது.

    நெஞ்சின்கண் அன்பின் காரணமாகப் பாதகங்களைச் செய்து மனம் சஞ்சலம் உறுவதும், அப்பாதகம் காரணமாக வரத்தக்க இடர்களையும் பிணிகளையும் எண்ணி யஞ்சுவதும், பிணியுற்று வருந்துவதும், தமது நிலையையும் செய்த குற்றங்கள் தோன்றி மனதை வெதுப்பும் நிலையையும் சிவஞானிகட்குள்ள உயர்வும் பெருமையும் தமக்கு இல்லாமையையும் நினைந்து வருந்துவதும், ஓய்வின்றிச் செய்யப்படும் வினைகளால் எய்தும் இளைப்பும், துன்ப மிகுதியால் மனம் சழக்குறுவதும், உரமிழந்து அவல முறுவதும் எடுத்தோதி, இக்குறளை நீக்கினால் திருவருட்குப் பெருமையாம் என உரைக்கின்றார்.

கொச்சகக் கலிப்பா

1223.

     ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில்என்
     அப்பாஉன் பொன்னடிக்கே அன்பிலேன் ஆனாலும்
     தப்பா தகமலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற
     இப்பா தகத்தேற் கிரங்கினால் ஆகாதோ.

உரை:

      ஒப்பொருவரு மில்லாத உயர்ந்த உறவானவனே, திருவொற்றியூரில் எழுந்தருளும் என் தந்தையே, உன் திருவடிக்கண் அன்பில்லாதவனாயினும், ஒழிவின்றிக் குழையும்படி மனமானது கலக்க மிகுந்து ஏங்குகின்ற பாதகனாகிய எனக்குத் திருவுள்ளம் இரங்கியருளுவது ஆகாத தொன்றோ? கூறி யருள்க. எ.று.

     உத்தமன் - உயர்ந்த தமன் எனப் பிரித்து உயர்ந்த உறவினன் எனப் பொருள்படுவது. இயல்பாகவே பாசவிருள் இல்லாதவன் எனவும் இச் சொற்குப் பொருள் காணலாம். “மற்றாரும் தன்னொப்பாரில்லாதான் காண்” (ஆரூர்) எனத் திருநாவுக்கரசர் முதலியோர் கூறுதலால், “ஒப்பாருமில்லாத உத்தமனே” என்று இயம்புகின்றார். திருமேனி பொன்னிறத்ததாதலால் திருவடி “பொன்னடி” எனப்படுகிறது. மனத்தின்கண் சிறிதிடமும் ஒழிவின்றித் துன்பம் நிறைந்தமை விளங்க, “தப்பாது அகம் சஞ்சலம் மலிய” என வுரைக்கின்றார். பொய் முதலிய குற்றங்களை யுடையவன் என்றற்குப் “பாதகத்தேன்” எனக் குறிக்கின்றார். பொய், புலை, கொலை, கள், காமம் என்பன ஒவ்வொன்றும பாதகமெனப்படுதலால், “பாதகத்தேன்” என அஞ்சாமற் கூறுகிறார். செய் வினையின் பாதகமாம் தன்மையை உணர்ந்து வருந்தித் திருந்துவோர்க்கு அருளுதல் அறமாதலால், “இப் பாதகத்தேற்கு இரங்கினால் ஆகாதோ என” வேண்டுகின்றார்.

     இதனால், அன்பிலேனாய்ப் பாதகமுடையேனாயினும் சஞ்சலத்தால் வருந்துகின்ற எனக்கு அருளுக; அஃது அறமாம் என உரைத்தவாறாம்.

     (1)