1224.

     எஞ்சா இடரால் இரும்பிணியால் ஏங்கிமனம்
     பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச்
     செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி அப்பாநீ
     அஞ்சாதே என்றுன் அருள்கொடுத்தால் ஆகாதோ.

உரை:

      செஞ்சொலி யென்னும் நெல்விளையும் திருவொற்றியூர் அப்பனே, குறையாத இடர்ப்பாடுகளாலும் மிக்க நோய்களாலும் மனம் ஏக்கமுற்றுப் பஞ்சுபோல் மெலிந்து வருந்துகிற நாயின் தன்மையுடைய எனக்கு, நீ இனி அஞ்சவேண்டா என உரைத்தருளுவாயாயின், அது நன்றாகாதோ. எ.று.

     நெல் விளையும் வயல் நலமில்லாததைப் பண்டையோர் ஊரென்னாராதலின், சாலி நெல் விளையும் சிறப்புடைமை தோன்றச் “செஞ்சாலி யோங்கும் திருவொற்றியப்பா” என வுரைக்கின்றார். மேற்கொண்ட செயல்கள் நிறைவுறா வண்ணம் தடுத்துத் துன்பம் விளைவிப்பன இடர்களாதலாலும் அவை தாமும் அடுக்கி வரும் இயல்பினவாதலாலும், “எஞ்சா இடரால்” எனவும், புறத்தவாகிய இடரில்லை யாயினும் உளவாயினும், அகத்தே பிணிகள் வேறு தோன்றி நோய் செய்தல் வாழ்வில் நிகழ்தலின் “இரும்பிணியால்” எனவும், இவற்றால் மனவமைதி கெட்டழிந்து பல்வேறு நினைவுகளால் அலைப்புண்டு மெலிவது விளங்க, “மனம் ஏங்கிப் பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேன்” எனவும் எடுத்துரைக்கின்றார். இந்நிலையில் கையறவும் அச்சமும் தோன்றி மனத்தைப் புண்ணாக்குதலால், “அஞ்சுதல் ஒழிக” என ஒரு சொல்லை நீ அருளினால் ஊக்கமுற்று உய்தி பெறுவேன் என்பாராய், “அப்பா நீ அஞ்சாதே என்றுன் அருள் கொடுத்தால் ஆகாதோ” என வேண்டுகின்றார்.

     இதனால், அச்சமின்றாக அருள் வழங்க வேண்டியவாறாம்.

     (2)