1225.

     பற்றும் செழுந்தமிழால் பாடுகின்றோர் செய்தபெருங்
     குற்றம் குணமாகக் கொள்ளும் குணக்கடலே
     மற்றங்கும் எண்தோள் மலையே மரதகமே
     பெற்றிங் கடியேன் பிணிகெடுத்தால் ஆகாதோ.

உரை:

      பற்று உண்டாக்கும் செழுமையான தமிழினாற் பாடல் செய்பவர் செய்யும் குற்றங்களைக் குணமாகக் கொண்டு ஆதரவு செய்யும் குணக்கடலே, மற்போர் வலிநிறைந்த எட்டுத்தோளையுடைய மலை போல்பவனே, மரகதமே, நின் தன்மைக்கு அடியவனாகிய எனது நோயைப் போக்குவது புண்ணிய மாகாதோ? எ.று.

      பற்றும் தமிழ் - இறைவன்பால் பற்றை யுண்டு பண்ணும் தமிழ். நாளுந் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர் முதல் பலரும் பல்லாயிரக்கணக்கில் பாடிய பத்தி நிறைந்த பைந்தமிழ்ப் பாக்களை நினைவிற் கொண்டு “செழுந்தமிழ்” என்கின்றார். உண்மை அன்பினால் பாடும் பணியில் உறைத்து நிற்கும் அன்பர்கள் ஒரோவழி முக்குணவயத்தால் தவறு செய்வரேல், அருட் பெருங் கடலாகிய இறைவன், அத்தவற்றினைப் பொருளாகக் கொள்ளாது பொறுத்தாளும் அருளுடைமை நினைத்து ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர் குற்றம் செய்தனர் என்றும், அவற்றை இறைவன் குணமெனக் கொண்டருளினன் என்றும், நம்பியாரூரர் கூறியதுபற்றி, ஈண்டு வள்ளலார் “செழுந் தமிழால் பாடுகின்றோர் குற்றம் குணமாகக் கொள்ளும் குணக் கடலே” என்று மொழிகின்றார். “நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன், நாவினுக் கரையன், நாளைப் போவானுங், கற்ற சூதன், நற்சாக்கியன், சிலந்தி, கண்ணப்பன், கணம்புல்லன் என்றிவர்கள், குற்றஞ் செய்யினும் குணமெனக் கருதும் கொள்கை கண்டு நின் குரைகழல் அடைந்தேன்” (புன்கூர்) என்று நம்பியாரூரர் கூறுவது காண்க. மல் - வலிமை. கல்லொடு பொருது மல்லர் தோளுக்குப் பிறப்பிக்கும் வலிமை 'மல்' எனப்படும். தோளின் உயர்ச்சியும் வலிமையும் நோக்கி, “மலையே” என்கின்றார். இடப்பாகம் பார்வதியின் பசுமை ஒளிகொண்டு திகழ்தலின் “மரகதமே” என்கின்றார். பெற்றிக்கு என்பது “பெற்றிங்கு” என எதுகை நோக்கி மெலிந்தது. “பெற்றி பிறர்க்கரிய எம்மான் பெருந் துறையான்” (அம்மானை) என்பது திருவாசகம்.

     இதனால், நின் பெருந்தன்மையை நோக்க எனது பிணி கெடுத்தல் அறமாம் என விண்ணப்பித்தவாறு.

     (3)