1226.

     எந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத்
     தந்தையே தாயே தமரேஎன் சற்குருவே
     சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயாஎன்
     நிந்தையே நீங்கா நிழல்அளித்தால் ஆகாதோ.

உரை:

     எந்தையே என்று போற்றுவோர்க்கு இனிய அமுது போன்றவனே, எனக்கு உரிமையான தந்தையே, தாயே, உறவே, மெய்ம்மைக் குருவே, மனத்தின்கண் ஓங்கித் தோன்றும் திருவொற்றியூர் ஐயனே, என்பால் உள்ள குற்றம் நீங்குமாறு உனது திருவருளின்ப நிழலை அளிப்பது தீதாகுமோ? எ.று.

     இறைவனுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு உணர்ந்தவர் அன்றி, அவன் தனக்குத் தந்தையென்கிற உறவும், அதுவாயிலாகப் பிறக்கும் இன்பமும் பிறவாவாகலின், “எந்தையே என்பவர்தம் இன்னமுதே” என்றும், தாயாய்ப் புறந்தருதலும், தந்தையாய்ச் சான்றாண்மை தருதலும் இறைவன் செயலாதல் உணர்ந்தவர், அவனது அம்மையப்பராம், உரிமைச்செயலை உணர்வதுபற்றி, “என் உரிமைத் தந்தையே தாயே, தமரே” எனவும், தனது அறிகருவிகள் மயங்குமிடத்து உள்ளிருந்து நல்லுணர்வு கொளுத்துவது உணருமிடத்து இறைவன் தனக்கு ஆசிரியனாதல் உணரப்படுதலின், “என் சற்குருவே” எனவும் உரைக்கின்றார். சிந்திப்பார் சிந்தையே கோயிலாகக் கொள்பவன் என்பது பற்றி, “சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயா” என வேண்டுகிறார். நிந்தை - குற்றம். நிழல் என்றது, ஈண்டுத் திருவருள்.

     இதனால், மனத்தை வெதுப்பும் குற்றங்களினின்றும் நீக்க வல்ல திருவருளை வழங்குக என வேண்டியவாறாம்.

     (4)