1227. உள்ளும் திருத்தொண்டர் உள்ளத் தெழுங்களிப்பே
கொள்ளும் சிவானந்தக் கூத்தாஉன் சேவடியை
நள்ளும் புகழுடைய நல்லோர்கள் எல்லோரும்
எள்ளும் புலையேன் இழிவொழித்தால் ஆகாதோ.
உரை: அன்பால் நினைக்கின்ற திருத்தொண்டர்களின் மனத்தில் ஊறுகின்ற இன்பமே, ஞானிகள் பெற்று மகிழும் சிவமாகிய பேரின்பக் கூத்தப் பெருமானே, உன் சிவந்த திருவடிகளைச் சேரும் நன்மக்கள் யாவரும் கண்டு இகழும் புலைத்தன்மை யுடைய எனது இழிதகவைப் போக்குவது உனக்கு அழகன்றோ? எ.று.
தொண்டராயினார் உள்ளுவ தெல்லாம் சிவத்துக்குரிய திருத்தொண்டே யாதலின், அதன்கண் அவரது உள்ளம் தளர்ச்சி யின்றிச் செல்லும் பொருட்டு, ஞானமும் இன்பமும் சுரந்த வண்ண மிருத்தலின். “உள்ளும் திருத்தொண்டர் உள்ளத்து எழுங் களிப்பே” என்கின்றார். “தொண்டர் வழிபாடு செய்யல் ஒழி பாடு இலாத பெருமான்” (நனிபள்ளி) என்று ஞானசம்பந்தரும் நவில்வர். இறைவனுடைய திருக்கூத்து. காண்பார்க்குச் சிவபோக இன்பத்தை நல்குவது என்ற கருத்தையுட்கொண்டு, “கொள்ளும் சிவானந்தக் கூத்தா” என்கின்றார். திருக்கூத்தினிடத்தே இன்பஞ் சுரப்பதை, “இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங்கூத்தின் வந்த பேரின்பம்” (தடுத்தாட் - 106) என்று சேக்கிழார் உரைப்பது காண்க. இறைவன் திருவடியை அடைதற்குரிய ஞானமும் ஒழுக்கமுடைய பெருமக்களை “சேவடியை நள்ளும் புகழுடைய நல்லோர்” என்றும், அவர்களை நோக்கத் தாம் உடைய ஞானமும் ஒழுக்கமும் புல்லியன என நினைந்து மனம் புழுங்குகின்றமை தோன்ற, “எள்ளும் புலையேன் இழிவொழித்தால் ஆகாதோ” என்றும் உரைக்கின்றார்.
இதனால், சிவஞானிகளோடு ஒத்த ஒழுக்கமும் புகழும் பெறாமை நினைந்து வருந்தியவாறாம். (5)
|