1228. கோதைஓர் கூறுடைய குன்றமே மன்றமர்ந்த
தாதையே ஒற்றித் தலத்தமர்ந்த சங்கரனே
தீதையே நாள்தோறும் செய்தலைந்து வாடுமிந்தப்
பேதையேன் செய்த பிழைபொறுத்தால் ஆகாதோ.
உரை: பூமாலை யணிந்த தேவியாகிய உமையை ஒரு பாகத்திலே யுடைய குன்றம் போல்பவனே, அம்பலத்தை விரும்புகின்ற தந்தையே, திருவொற்றியூரில் எழுந்தருளும் சங்கரனே, குற்றமே செய்து நாளும் வருந்துகின்ற பேதையாகிய என் பிழையைப் பொறுத்தருளுவது ஆகாத தொன்றோ? எ.று.
திருவடியை வணங்கி நோக்குமிடத்துத் திருமார்பும் திருமுகமும், திருமுடியும் பொன்மலைபோலத் தோன்றுதலால் “குன்றமே” என்றும் உமாதேவியின் கூறும் காண விளங்குவதால், “கோதையோர் கூறுடைய குன்றமே” யென்றும் உரைக்கின்றார். சிவன் கோயில்தோறும் மன்றமைத்துக் கூத்தப் பெருமானை எழுந்தருள்வித்தலால், “மன்றமர்ந்த தாதையே” என மொழிகின்றார். ஒற்றித் தவம் - திருவொற்றியூர்க் கோயில். தீது - குற்றம். குற்றமான நினைவும் சொல்லும் தம்மை யறியாமலே நாளும் நிகழ்வது பற்றி “தீதையே நாடோறும் செய்தலைந்து வாடும்” எனவும், அறிவறியாமலே நிகழ்வதற் கேது பேதமை என்றற்குப் “பேதையேன்” எனவும், பிழைபொறுத்தல் நின் பெருமைக்குத் தக்கது என்பார், எதிர்மறை முகத்தால், “பிழை பொறுத்தால் ஆகாதோ” எனவும் எடுத்துக் கூறுகின்றார்.
இதனால், நாளும் பேதைமையால் நிகழும் பிழை பொறுத்தருள்க என வேண்டியவாறாம். (6)
|