1229. முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம்
தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே
சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே
எத்திக்கும் இல்லேன் இளைப்பொழித்தால் ஆகாதோ.
உரை: முத்திப் பேற்றுக்குக் காரணமானவனே, துளைபடாத முழுத்த மணி போல்பவனே, முத்தி ஞானிகளின் திருவுள்ளம் இனிக்குமாறு சுரக்கும் தேனே, சிவமே, செழுமையான ஒளி மிக்க சுடரே, சத்தி தத்துவ மெனப்படும் விந்து தத்துவத்துக்கு மேலதாகிய சிவதத்துவமெனவும் வழங்கும் நாத தத்துவத்தைக் கடந்த பரதத்துவப் பொருளே, எத்தகைய ஆதரவுமில்லாத எனக்கு உண்டாகிய தளர்ச்சியைப் போக்கி யருளுவ தாகாத செயலோ? எ.று.
சிவபரம் பொருளில்லையாயின் முத்தி நிலையும் அதனை வேண்டும் நிலைமையும் உலகத்தில்லா தொழிதலின், சிவத்தை “முத்திக்கு வித்தே” என மொழிகின்றார். மணி என்றது, ஈண்டு மாணிக்க மணியை எனக் கொள்க. முத்திப் பேற்றுக்குரிய ஞான வொழுக்கங்களை யுடையோர் சிந்தனை முற்றும் சிவமே யாதலில், அச் சிந்தனை சிதையாவாறு சிவானந்தத் தேன் ஊறிய வண்ணம் இருப்பதுபற்றி “முத்தர் உளம் தித்திக்கும் தேனே” என்றும், ஏனைத் தேன் போலாது சிவானந்தத் தேன் சிந்தையிற் றெளிவே நல்கிச் சிவநினைவே நிலைபெறச் செய்வது தோன்றச் “சிவமே செழுஞ் சுடரே” என்றும் இசைக்கின்றார். “கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்” (சிவபு) என மாணிக்கவாசகர் விளங்க வுரைப்பது காண்க. சுத்த மாயையின் மத்தகத்துள்ள விந்து நாத தத்துவங்களை முறையே சத்தி தத்துவம், சிவ தத்துவ மெனவும் வழங்குபவாதலின், “சத்திக்கும் நாதத் தலங் கடந்த தத்துவனே” எனச் சொல்லுகிறார். சத்திக்கும் நாத தலமாகிய சிவத்துக்கும் கடந்துள்ள பரதத்துவன் எனப் பொருள் கொள்க. ஆதரவில்லாதவரைத் திக்கில்லாதவர் என்பது உலக வழக்கு. “உனக்கு அட்ட திக்கினிலு மொரு திக்கிலை” (முத்து. பிள்) எனக் குமரகுருபரர் உரைப்பது காண்க.
இதனால், நாளும் வினை செய்தெய்திய இளைப்பை மாற்றி யருள வேண்டியவாறாம். (7)
|