123.

    உள்ளமனக் குரங்காட்டித் திரியு மென்றன்
        உளவறிந்தோ ஐய்யாநீ யுன்னைப்போற்றார்
    கள்ளமனக் குரங்குகளை யாட்ட வைத்தாய்
        கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய்
    தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
        தெளிவேயென் தெய்வமே தேவர் கோவே
    தள்ளரிய புகழ்த் தணிகை மணியே சீவ
        சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

உரை:

     நீக்குதற்கரிய புகழ்க் கூறுகள் நிறைந்த தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, தெளிந்த அமுதமே, நிறைந்த பெரிய கடல் போன்றவனே, தேனே, மெய்யுணர்வால் தெளியக் கண்ட ஞானப் பொருளே, எனக்கமைந்த தெய்வமே, தேவர்களின் தலைவனே, என்னிடமுள்ள மனமாகிய குரங்கு, ஆட்டியவாறே ஆடுகின்ற என் தன்மையை அறிந்தே, உன்னைப் போற்று வதில்லாத மக்களுடைய கள்ளத்தன்மை பொருந்திய மனமாகிய குரங்குகளையும் என்னை ஆட்ட வைத்தாய்; ஆனால் கடையவனாகிய யான் எவ்வளவோ பொறுத்தும் தாங்க மாட்டாதவனாயினேன்; என் நிலை கண்டு அருள் புரிக, எ. று.

     பாடிப் புகழ்தற் குரியன இவை தகாதன இவை எனத் தேர்ந்து தள்ளி விடுதற்கின்றிப் புகழ்க்குரியனவே நிறைந்த தணிகை என்பது விளங்கத் “தள்ளரிய புகழ்த் தணிகை” என்று சாற்றுகின்றார். கடல் போல்வது பற்றிக் ‘கடலே’ என்கின்றார். அமுத மென்பதைப் பாலாகக் கொண்டு அப்பாற்கடலினும் பெருமையும் தெளிவும் உடைய கடலுண்டாயின் அதனை யொப்பவன் முருகப் பெருமான் என்று உரைப்பினும் பொருந்தும். ஞானங்கள் பலவாதலின், தெளிவு மிக்க சிவஞானத்தை உபதேசித்த வரலாறு பற்றி, “ஞானத் தெளிவே” என வுரைக்கின்றார். மனத்தைக் குரங்காகக் கூறுவது கவி மரபாதலால் “மனக்குரங்கு” என்றும், ஒவ்வொருவரிடத்தும் இருத்தலால் “உள்ள மனக் குரங்கு” என்றும் இயம்புகின்றார். மனம் போன போக்கில் தான் திரிவதாகக் கூறுகின்றாராதலால், “மனக் குரங்காட்டித் திரியும் என்றன்” எனவும், என்னைத் தெருட்டி உன்வழி மனம் நிற்க வேண்டுமே யன்றி மனத்தின் வழி நீ செல்லுதலாகாதென உரைக்காமல் எனக்கு இனமாயினார் பலரும் தம் மனம் போனவாறே சொல்லி அவர் வழியே என்னையும் ஈர்த்து இயக்கினர்; யானும் உன்னை யறிந்து போற்றும் நெறி பற்றாமல் ஆடினேன் என்பாராய், “உன்னைப் போற்றார் கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்” எனவும், மனக் குரங்கினால் ஆட்டப்படும் யான் வேறு வழி கொள்ளேன் என்று எண்ணிப் பிறர் மனக் குரங்குகளை யேவி என்னை ஆட்டச் செய்தாய் என்பாராய், “என்றன் உளவறிந்தோ” எனவும் மொழிகின்றார், குரங்காட்டித் திரியும் என்றவிடத்துச் செய்தெனெச்சம் காரணப் பொருளில் வந்தது. மனத்தின் வழியிலும்’ பிறர் காட்டிய தீய வழியிலும் சென்று திரிந்து மக்களினத்திற் கடையனாய்க் கெட்டொழிந்தேன் என்பது தோன்றக் “கடையனேன்” எனத் தம்மை இழிக்கின்றார். இவ்வாறு ஆடித் திரிந்து கீழ்மைத் துயர் எய்தியது போதும்; இனி என்னாற் பொறுக்க முடியாது; என்னை இந்நிலையில் செலுத்திய நீயே எடுத்து உய்வித்தல் வேண்டும் என முறையிடுவாராய்ப் “பொறுத்து முடிகிலேன் கண்டாய்” என உரைக்கின்றார்.

     இதனால் தன்னை மனம் போன போக்கில் ஆட்டி அலைத்தவன் முருகப் பெருமான் என்று குறித்து, இதனால் தான் எய்திய துயரை இனித் தாங்க முடியா தென முறையிடுவது காணலாம்.

     (21)