1230.

     வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான்சுடரே
     கஞ்சமுளான் போற்றும் கருணைப் பெருங்கடலே
     நஞ்சமுதாக் கொண்டருளும் நல்லவனே நின்அலதோர்
     தஞ்சமிலேன் துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ.

உரை:

      வஞ்ச நினைவுகளில்லாத நன்மக்கள் மனத்தில் பொருந்துகின்ற தெய்வ வொளியே, தாமரைப் பூவில் இருப்பவனாகிய பிரமன் துதிக்கும் கருணையாகிய பெரிய கடலே, கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக வுண்டருளிய நற்பண்புடையவனே, நின்னையன்றி வேறு புகலில்லாத எனது துன்பம் விளைவிக்கும் தீமையைப் போக்கி யருளுதல் இயலாத செயலாகுமா? எ.று.

       பொய்யும் வழுவும் வஞ்சமும் பிறவுமாகிய நினைவுகள் மனத்தை மாசுபடுத்தி இறைவன் எழுந்தருளுதற்கு இடமாக்கா தொழிதலின், “வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான் சுடரே” என வுரைக்கின்றார். “கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை . . . என் மனத்தே வைத்தேன்” (ஏகம்) எனத் திருநாவுக்கரசர் உரைக்கின்றார். மனம் தூயவர்பால் ஞானப் பேரொளியாய்த் திகழ்வது பற்றி “வான்சுடர்” எனப் போற்றுகின்றார். “கள்ளத்தைக் கழியம் மனமொன்றி நின்று உள்ளத்தில் ஒளியைக் கண்டது உள்ளமே” (உள்ளக்குறுந்) என நாவுக்கரசர் நவில்வது காண்க. கஞ்சம் - தாமரை. “கடலைக் கடைய எழு காள கூடம் ஒடிக்கும் உலகங்களை என்று அதனை உமக்கே அமுதாக வுண்டீர்” (அழபுத்தூர்) என நம்பியாரூரர் உரைப்பது காண்க. உலகுய்யும் பொருட்டு நஞ்சுண்டருளிய நலம் பற்றிச் சிவபெருமானை “நல்லவனே” எனச் சிறப்பிக்கின்றார். தஞ்சம் - புகலிடம். துன்பம் அறிவைச் சிதைத்து மனத்தைப் புண்ணாக்குதலால், அதனை அறவே துடைத்தல் வேண்டும் என்று கூறுவார், “துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ” என முறையிடுகின்றார்.

     இதனால் துன்பத்தால் உண்டாகும் மனச் சழக்கை ஒழித்தல் வேண்டுமென முறையிட்டவாறாம்.

     (8)