1231.

     சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந்
     நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே
     தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால்
     வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ.

உரை:

      ஐயனே, தான் பெற்ற பிள்ளை செய்யும் குற்றத்தை நன்கறிந்தும் தாய் அப் பிள்ளையை வெகுளாமல் பொறுத்தாளுவள்; அதுபோல் நாய்போன்ற யான் செய்யும் பிழைகளை நீ பொறுத்தருளுவதும் நீதியாமன்றோ? நாளும் தேயும் சந்திரனைப் போல் ஒளி குன்றி என்னுடைய நெஞ்சம் மயங்கச் செய்யும் துன்பத்தால் வாய்விட்டலறி அழுது வாட்டமடையும் என்னை, அருளொடு நோக்கி வருகவென மொழிந்து அழைப்பாயேல், அது நினக்குப் பொருத்த மாகாதோ? எ.று.

     தான் பெற்ற சேய் செய்தது பிழையென்று நன்கு அறிந்தவிடத்தும், தாய்க்கு அச் சேயின்பால் உள்ள பேரன்பு அவள் உள்ளத்தெழும் சினத்தை அடக்கி விடுதலால் சீறுதலின்றிப் பொறுத்துக் கொள்வது உலகியலில் நாளும் நிகழ்வதாகலின், அதனைச் “சேய் பிழையைத் தாயறிந்து சீறாள் பொறுப்பள்” என எடுத்தோதுகின்றார். சிறியவர்பாற் பிழைகாணும் பெரியவர் சினத்தாற் சீறுவது இயல்பாயினும், தாயன்புக்கு அது விலக்காம் என அறிக. தம்மை இழித்துக் கூறற்கு “இந்நாய்” எனச் சுட்டுகின்றார். கடையாயினார் செய்பிழையை யாவரும் பொறாது இகழ்வராயினும், எல்லோரையும் தாயாய் அருளித் தலையளிக்கும் பேரருள் முதல்வனாகிய நீ புறக்கணிப்பது முறையாகாதென்பார், “நீ பொறுக்க ஞாயம் உண்டே” எனக் கூறுகிறார். ஐயா என்பதன் ஈற்றில் நின்ற எதிர்மறை யேகாரம் பிரித்து உண்டென்பதனோடு கூட்டப்பட்டது. துன்பத்தால் மனம் மயங்குதலும் அறிவு கலங்குதலும் புலப்பட “தேய் மதிபோல் நெஞ்சம் தியக்கமுற” என்றும், செயல் வேறு இல்லாமையால் வாய்விட்டலறி யழுதல் விளங்க, “சஞ்சலத்தால் வாயலறி வாடும்” என்றும், அந்நிலையில் வாவெனினும் அருளுரை செவியிற் புக்கு மனத்தைத் தெளிவித்து அழுகையை மாற்றி மகிழ்விக்கு மென்பார், “எனை வா என்றால் ஆகாதோ” என்றும் மொழிகின்றார்.

     இதனால், சஞ்சலத்தினால் மனம் குழம்பி வாய் விட்டலறும் அவலத்தைப் போக்குக என வேண்டியவாறாம்.

     (9)