1232. கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை
எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே
உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற
மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ.
உரை: கண்ணுள் விளங்கும் கண்மணி போல நின்னை மதித்துப் பேணுகின்ற நன்மக்களை, எண்ணப்படுகிற கணப்பொழுதும் நீங்குதலில்லாத இனிய அருளமுதே, உண்ணப்படும் உணவின் பொருட்டும் உடுக்கப்படும் உடையின் பொருட்டும் ஓய்வின்றி யுழைத்து அலைகின்ற மண்ணுலக வாழ்வில் எனக்குளதாகும் மதிமருட்சியைப் போக்குவது உனக்கு ஆகாத செயலாகுமோ? எ.று.
உண்மை யண்புடையார்க் கன்றி அன்பு செய்யப்பட்டாரைக் கண்ணின் மணிபோற் கருதிப்பேணும் காதலன்புள தாகாதாகலின், சிவன்பால் நல்லன்புடைய நன்மக்களை, “கண்ணுள் மணிபோற் கருதுகின்ற நல்லோர்” எனவும், அவரது மனமே கோயிலாகக் கொண்டு இமைப்போதும் நீக்கமின்றி இருப்பது இறைவன் இயல்பெனச் சான்றோர் கூறுதலால், “எண்ணும் கணமும் விடுத்து ஏகாத இன்னமுதே” எனவும் இயம்புகின்றார். “இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” (சிவபு) எனவும், “தேனாய் இன்னமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான், தானே வந்தென துள்ளம் புகுந்தடியேற் கருள் செய்தான்” (ஏசற) எனவும், மணிவாசகப்பெருமான் உரைப்பதரிக. பொருளின் விளைவுக்குறைவாலும் வறுமையாலும் மக்கள் உணவுக்கும் உடைக்கும் படும்பாட்டைக் கண்டு வள்ளற்பெருமான் மனம் வாடுகின்றாராதலால், “உண்ணும் உணவுக்கும் உடைக்கும் முயன்றோடுகின்ற மண்ணுலகம்” என்றும், மக்களினத்தின் வேறாகத் தம்மை நினையாது அவர்கள் படுந்துயரத்தைத் தாமும் எய்தி நின்றமையில் மனம் மயக்குற்றமைப் புலப்பட, “என்றன் மயக்கறுத்தால் ஆகாதோ” என்றும் வருந்துகிறார்.
இதனால், மண்ணில் உணவுக்கும் உடைக்கும் மக்கள்படும் துயர் கண்டெய்தும் மயக்கறுக்க வேண்டியவாறாம். (10)
|