61. பழமொழி மேல்வைத்துப் பரிவு கூர்தல்
திருவொற்றியூர்
உலகில்
வாழும் மக்கட்கு, உலகு தனது இனிய காட்சியாலும் போகப் பொருள்களாலும் மிக்க இன்பம் தந்து
தன்னையே காதலித்து உறையுமாறு பண்ணுகிறது. பிறந்த நாட்டின்பாலும், அதனிடை இயற்கையாலும்
செயற்கையாலும் உளவாகும் பொருள்களின்பாலும் மக்கட்கு அன்பும் ஆதரவும் தோன்றுகின்றன.
உலகியற் பொருள்களை யுண்டு வாழ்கின்ற உடம்பினிடத்தும் உயிர்கட்கு மிக்க காதல் தோன்றிப்
பிணித்துக் கொண்டுளது. பல்வகை நோய்கட்கும் இரையாகித் துன்பம் செய்வதும் உடம்பே எனினும்,
உயிர் உடம்பை விட்டு நீங்குதற்கு விரும்பாமல், அவ்வுடம்பு தரும் நோய் அனைத்தையும் ஏற்று
அதனோடே கிடக்கிறது.
உலகியல் அனுபவமும் உயர்ந்தோர் உணர்ந்துரைத்த உண்மை யுரைகளும்
ஓர்ஒருகால் உயிருணர்வை எழுப்பி, உடலோடிருந்து நுகரும் உலகியல் நலத்தின் நிலையாமை கண்டு
உவர்ப்பை யுண்டு பண்ணி விடுகின்றன. அந்நிலையில் அவர்கட்கு உலகியல் வாழ்வில் நாளடைவில்
பற்றின்மை தோன்றி அவர்களைத் துறவிகளாக்கி விடுகின்றன. அவர்கட்கு இளமை முதல் முதுமைகாறும்
வாழ்ந்து போந்த வாழ்வின்கண் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் நினைவிற் றோன்றி மனத்தை
வருத்துகின்றன. அவற்றை எடுத்துப் பிறர்க்கு உரைத்தாலன்றி மனவமைதி உண்டாக மறுக்கின்றது.
உடன் வாழும் மக்கட்கு உரைப்போமெனின் கேட்டு இன்புறுவோர் மிகச் சிலராகவே யிருப்பர். பலர்
வாழ்க்கை தரும் இன்பத்தில் திளைப்பவராதலின், கேட்டற்கு விழையாது விலகி
நீங்குகின்றார்கள். தம்மை யொத்த முதியோர்க் குரைப்பாமெனில், அவர் கண்டனவும், இவர்
கண்டனவெனவும் கருத்தளவில் ஒத்தலின் அவரிடையேயும் உலகியல் உவர்ப்புரை யுரைத்தற்கு
இடமின்றாகிறது.
இந்நிலையில் உரைப்பவர் பாவன்மையும் பரந்த புலமையும் உடையராயின்
உவர்ப்புரையனைத்தும் இன்பவுரையாட்டாய் உண்மையறிவைக் கூர்மை செய்து ஒளியுடையதாக்கும் உயர்வு
பெறும். இங்கே, சிறந்த புலமையும் பல்வகைப் பாவன்மையும் இனிய நாவன்மையும் பண்பட்ட
பத்திமையும் உடையராதலின் வடலூர் அடிகள் வாழ்வில் உவர்ப்பையும் வெறுப்பையும் தோற்றுவிக்கும்
வகையில் அவ்வப்போது நிகழ்ந்தவற்றைக் கேட்பாரும் படிப்பாரும் இன்புறும் இனிய பழமொழிகளின்
வாயிலாப் பாடி விளக்குகின்றார்.
விளக்குவதனைக் கேட்பவர் படிப்பவர் உள்ளம் வெறும் உவர்ப்புறு உலகியல்
நிகழ்ச்சியில் ஒன்றாது, உலகியல் உவர்ப்பால் உள்ளத்தை யுயர்த்தி உலவாப் பேரின்பம்
நல்கும் சிவன்பால் ஒன்றுவிப்பது சிறப்புடைய பணி என நினைப்பவர் நமது வள்ளற்பெருமான்,
அதனால், பழமொழி வாயிலாக உள்ளுற்ற உணர்ச்சியை வெளியிடும்போது திருவொற்றியூர்த்
தியாகப்பெருமான் திருப்புகழையும் திருவருட் பெருமையையும் ஒவ்வொரு பாட்டிலும் இனிது
பாடுகின்றார்.
1233. வானை நோக்கிமண் வழிநடப் பவன்போல்
வயங்கும் நின்அருள் வழியிடை நடப்பான்
ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன்
உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய்
மானை நோக்கிய நோக்குடை மலையாள்
மகிழ மன்றிடை மாநடம் புரிவோய்
தேனை நோக்கிய கொன்றையஞ் சடையோய்
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
உரை: மான் போன்ற விழியையுடைய மலைமகளாகிய உமாதேவி மகிழுமாறு அம்பலத்தின்கண் திருக்கூத்தாடுபவனே, தேன் பொருந்திய கொன்றை மாலையணிந்த சடையையுடையாய், திருவொற்றியூரில் கோயில் கொண்டருளும் தியாக நாயகனே, வானத்தைப் பார்த்துக் கொண்டு மண்மேல் வழி நடக்கும் ஒருவன் போல, விளங்குகின்ற நின் திருவருளின் வழியில் நடக்க வேண்டி என் உடல் வேண்டிச் செலுத்தும் வழியிற் செல்கின்றேன்; ஆயினும் திருவடியே சிந்தையிற் கொண்டிருக்கும் யான் உய்யும் பொருட்டு நீ மனமுவந்து அருள் புரிய வேண்டும். எ.று.
மானை நோக்கிய நோக்கு - மான் போன்ற விழி; “மானின் நேர் விழி மாதராய்” என்று ஞானசம்பந்தர் பாடுவது காண்க. மலையாள் - மலையரசன் மகள். உமையவள் கண்டு மகிழ்வதில்லையாயின், அம்பலத்தில் இறைவனுக்குக் கூத்தில்லை என்பது பற்றி, “மலையாள் மகிழ மன்றிடை மாநடம் புரிவோய்” என்று கூறுகின்றார். திருக்கூத்தால் படைத்தல் முதலிய ஐவகைத் தொழிலும் உலகில் நடைபெறும் பெருமை புலப்பட, “மாநடம்” என்று சிறப்பிக்கின்றார். தேன் பொருந்திய கொன்றை என்பது எதுகை நோக்கித் தேனை நோக்கிய கொன்றை என வந்தது. பிறர் அமுதுண்ணத் தான் நஞ்சுண்டதும், பிறர் பட்டுடுக்கத் தான் தோலுடுத்ததும், பிறர் அரண்மனை வேண்டத் தான் சுடுகாடு வேண்டியதும் இன்னோரன்ன பிற தியாகத்திலும் சிவனுக்கு நிகர் வேறு பிறர் இன்மையின், அவரைத் “தியாக நாயகன்” என்று இயம்புகின்றார். நாயகன் - தலைவன். மண்மேல் வழி நடப்பவர் வானத்தை நோக்கிச் செல்லின் வழிமாறித் தீநெறிப்பட்டு இடர்ப்படுவர்; அதுபோல் அருள்வழி நடந்து சிவஞானம் பெற்று இன்புற வேண்டுகிறயான், உடம்பை நோக்கி அதற்குரிய உண்பொருளும் பிறவுமாகிய பொருள் வழியே செல்வேனாயினேன்; அதனால் நோயும் வறுமையும் எய்தித் துன்புற்றேன்; உடம்பைப் பேணுதலும் ஒருவகை யறமாதலாலும், அதனால் மெய்ஞ்ஞானம் கைகூடற் கிடமுண்மையாலும், என்னை அதுபற்றி வெறாது எனக்கு உய்தியருளுக என வேண்டுவாராய், “ஆயினும் அடியேன் உய்யும்வண்ணம் நீ உவந்தருள் புரிவாய்” என உரைக்கின்றார்.
இதனால், மண்வழி நடப்பவன் வானத்தை நோக்கலாகாது என்ற பழமொழி வாயிலாக அருள்வழி செல்லற்குரியவன் பொருள் வழி செல்வது சீரிதன்றென விளக்கியவாறாம். (1)
|