1234.

     வாயி லான்பெரு வழக்குரைப் பதுபோல்
          வள்ளல் உன்னடி மலர்களுக் கன்பாம்
     தூயி லாதுநின் அருள்பெற விழைந்தேன்
          துட்ட னேன்அருள் சுகம்பெற நினைவாய்
     கோயி லாகநல் அன்பர்தம் உளத்தைக்
          கொண்ட மர்ந்திடும் குணப்பெருங் குன்றே
     தேயி லாதபல் வளஞ்செறிந் தோங்கித்
          திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.

உரை:

      குறைதல் இல்லாத பல்வகை வளம் பொருந்தி யுயர்ந்து விளங்கும் ஒற்றியூர்த் தியாகப் பெருமானே, நல்ல அன்பருடைய மனத்தைக் கோயிலாகக் கொண்டு வீற்றிருக்கும் உயர் குணக்குன்றாய் விளங்குபவனே; உள்ளத் தெண்ணத்தை எடுத்துரைக்கும் திறனல்லாத பெரிய வழக்கினை மன்றார்த்தார்க்கு உரைப்பதுபோல, வள்ளலாகிய உன் திருவடியாகிய மலர்கட்கு அன்பு செய்வதாகிய பற்றுக்கோடின்றி உனது திருவருளைப் பெற விழைகின்றேன்; துட்டனாகிய யான் நின் அருள் வழிப் பெறலாகும் இன்பத்தைப் பெறற்குத் திருவுள்ளம் பற்றுவாயோ? எ.று.

     தேய் - தேய்தல்; முதனிலைத் தொழிற் பெயர். வளம் பலவும் கால வெள்ளத்தில் குறைந்து தேய்வது இயற்கையாயினும், திருவொற்றியூர்க்கண் பல்வகை வளமுண்டு; அவை குன்றுவன வல்லவென்பார் போல் “தேயிலாத பல் வளம் செறிந்”தென்று கூறுகின்றார். அரசரும் செல்வரும் பிறரும் எடுக்கும் கற்கோயிலினும் தூய அன்பர்தம் உள்ளக் கோயிலில் வீற்றிருப்பதையே சிவபெருமான் மிகவும் விரும்புவரென்பது விளங்கக் “கோயிலாக நல்லன்பர்தம் உளத்தைக் கொண்டமர்ந்திடும் குணப் பெருங்குன்றே” என்று கூறுகின்றார். குணவகையில் சலிப்பின்மை பற்றி குணக்குன்றே என்று குறிக்கின்றார். அன்பர் உள்ளத்தைக் கோயிலாகக் கோடல் அப் பெருமானுக்குச் சலியா வுயர்குணம் என அறிக. “அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்புலனும் அடக்கி ஞானம், புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்” (வீழி) என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. நல்லன்பு நிறைந்த உள்ளம் தூய்மை மிக்கு ஞான நிலையமாதலின், அதன்கண் ஞானமூர்த்தியாகிய சிவம் எழுந்தருள்வது பள்ளந்தாழ் உறுபுனல் போலும் பான்மை யென்று உணர்க. உள்ளத்தெழும் கருத்தைச் சொற்களால் உரைக்க மாட்டாதானை வாயிலான் என்பது உலக வழக்கு. சொல்லக் கருதுவது சிறுவழக்காய் மெய்ம்மைத்தே யாயினும் சொல்வோனது சொல்லமாட்டாமையால் பயனில் வழக்காயும் பொய்ம்மைத்தாயும் கெட்டொழியும்; வாயிலான் பெருவழக்குரைக்க முற்படுவனேல் மன்றத்தார்க்கு வழக்குரையும் விளங்கித் தோன்றாது; வழக்கும் நீதி பெறாது; அடியேன் பெறக்கருதும் திருவருணலத்துக்கு, வழக்குரைப்பானுக்கு வாய் போலத் திருவடிக்கண் அன்பு வேண்டும்; தன்பால் அவ்வன்பின்மையை, “உன் அடிமலர்களுக்கன்பாம் தூயிலாது” என்றும், வாயிலான் வழக்குரைத்து நீதி பெற விழைவது போல் அன்புடைய யான் நினது “அருள் பெற விழைந்தேன்” என்றும் இயம்புகின்றார். தன்பால் அன்பால் தூயின்மைக்கு ஏது தமது துட்டத்தன்மை என்று, அதுகொண்டு அருட் சுகம் பெற நினைப்பது தவறாதலையும் உய்த்துணர வைக்கின்றார். துட்டன் - தீநெறியாளன், தூய் - தூய்மை.

     இதனால், வாயிலான் பெருவழக்குரைக்க முற்பட்டு மாட்டாமையால் நீதியை இழப்பதுபோல், அன்பிலாத யான் அருட் சுகம் பெற விழைந்து அருள் புரியத் திருவுள்ளம் செய்க என முறையிடுகின்றார்.

     (2)