1235.

     வித்தை இன்றியே விளைத்திடு பவன்போல்
          மெய்ய நின்இரு மென்மலர்ப் பதத்தில்
     பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன்
          பாவி யேன்அருள் பண்புற நினைவாய்
     மித்தை இன்றியே விளங்கிய அடியார்
          விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய்
     சித்தி வேண்டிய முனிவரர் பரவித்
          திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.

உரை:

     சித்திகளைப் பெற விரும்பிய முனிவர்கள் பரவுதலால் விளக்கமுறும் திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாக நாயகனே, பொய்ம்மை யின்றி மெய்யுணர்வால் விளங்கிய அடியவர் விரும்பிய அனைத்தும் தழைக்குமாறு அருள்பவன் நீ; வித்தின்றி விளைவு செய்ய முயலுபவன்போல மெய்ம்மை வடிவினனாகிய உன்னுடைய இரண்டாகிய மெல்லிய மலர்போன்ற பாதங்களில் பத்தி சிறிதும் இல்லாமலே இருக்க முத்தி பெற விரும்பினேன்; பாவியாகிய யான் திருவருட்கேற்ற பண்பு பெறுமாறு திருவுள்ளம் செய்தருள்வாயாக. எ.று.

     சித்தத்தில் சிந்தித்தவற்றைச் சிந்தித்தவாறே எய்தப் பெறுவது சித்தி. மலையை அணுவாகவும், அணுவை மலையாகவும், இவ்வாறே அரிய பிறவற்றையும் செய்யும் வல்லுநர்களைச் சித்தர்கள் என்பர். பிற மக்களிடத்தில் மதிக்கற்பாடும் பூசையும் பெறல் விரும்பிய முனிவர்கள் பலர் முன்னை நாளில் இத்தகைய சித்தி பெற்றுச் சிறந்து விளங்கினரென நூல்கள் கூறுதல் பற்றி, “சித்தி வேண்டிய முனிவரர் பரவித் திகழும் ஒற்றியூர்த் தியாக நாயகனே” என்று பரவுகின்றார். முனிவரர் - முனிவர்களில் மேலோர். சித்திகள், அணிமா மகிமா முதலாக எண்வகையெனக் கூறுவர். முனிவரர் பலர் சிவனை வேண்டித் தவம் முயன்று இச் சித்திகளைப் பெற்றனர் என்றும், சித்தி பெறற்கமைந்த தலங்களுள் திருவொற்றியூரும் ஒன்றாதல் புலப்பட, “சித்தி வேண்டிய முனிவரர் பரவித் திகழும் திருவொற்றியூர்” என்றும் சிறப்பிக்கின்றார் என்றுமாம். மித்தை - பொய். பொய்யும் வழுவுமான உணர்வுகளை மித்தியா ஞானம் என்பர். பொய் கண்டகன்ற மெய்ஞ்ஞானிகளை “மித்தை யின்றியே விளங்கிய அடியார்” என்று குறிக்கின்றார். மெய்யுணர்ந்த ஞானவான்களால் உலகியல் வாழ்வும் ஒழுக்கமும் மக்களிடையே நன்கு அமைகின்றனவாதலின், அவர்கள் இன்றியமையாதன இனிது எய்தப்பெற்றுக் குறைவிலா நிறைவினராய் இருக்க வேண்டுதலின், அவர்கட்குத் தியாகப் பெருமான் அருள் புரியும் கூறுப்பாட்டை “விளங்கிய அடியார் விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய்” என்று எடுத்துரைக்கின்றார். இறைவன் ஒருவனையின்றிப் பிற எவராலும் வித்தின்றி விளைவு காண முடியாது; இது காறும் கண்டதுமில்லை. வித்தாகிய காரணமின்றி விளைவாகிய காரியம் பிறந்ததில்லை; இறைவன் திருவடியைப் பெறவேண்டினும் அதற்கு ஏது அவன் திருவடிக்கண் வைக்கப்படும் பத்தி என்பதை ஞானிகள் பண்டும் கூறினர். இன்றும் கூறுகின்றார். அதனைக் கேட்டும், தெளிந்தும், பத்தி செய்யாமலே நான் முத்தி பெற விழைகின்றேன் என்பாராய், “மென்மலர்ப் பதத்தில் பத்தியின்றியே முத்தியை விழைந்தேன்” என்று பகர்கின்றார். “பத்திமலர் தூவ முத்தியாகுமே” என ஞானசம்பந்தரும் உரைக்கின்றார். காரணமின்றிக் காரியம் பிறவாது என்ற இந்த இயற்கை யுண்மையைத் தானும் யான் அறியாது அலமருகின்றேன்; அதற்குக் காரணம் எனது பாவம் என்பார், “பாவியேன்” என்று குறிப்பாய் உணர்த்தி முத்திக்கேதுவாகிய பத்தி செய்தற்கு என்பால் அருட் பண்பு நன்கு அமையுமாறு அருளுக என வேண்டலுற்று, “அருள் பண்புற நினைவாய்” என உரைக்கின்றார்.

     இதனால், “வித்தின்றி விளைவதில்லை” என்ற பழமொழி வாயிலாகப் பத்தியின்றி முத்தி எய்தாது என்ற உண்மை விளக்கப்படுவது காணலாம்.

     (3)