1236.

     கலம்இ லாதுவான் கடல்கடப் பவன்போல்
          கடவுள் நின்அடிக் கமலங்கள் வழுத்தும்
     நலம்இ லாதுநின் அருள்பெற விழைந்த
          நாயி னேன்செயும் நவைபொறுத் தருள்வாய்
     மலம்இ லாதநல் வழியிடை நடப்போர்
          மனத்துள் மேவிய மாமணிச் சுடரே
     சிலம்இ லாஞ்சம்ஆ தியதருப் பொழில்கள்
          திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.

உரை:

      விளவும் இலாஞ்சமும் பிறவுமாகிய மரங்கள் நிறைந்த சோலைகள் விளங்கும் திருவொற்றியூர்த் தியாக நாயகனே, குற்றமில்லாத நல்வழியில் நடக்கும் மேலவர் மனத்தின்கண் எழுந்தருளும் பெரிய செம்மணியின் ஒளியை யுடையவனே, மரக்கலம் இன்றிப் பெரிய கடலைக் கடக்க முயல்பவனைப் போலக் கடவுளாகிய நின் திருவடித் தாமரைகளை வழிபடும் நற்பணியின்றி நினது திருவருளை விழைந்திருக்கும் நாயினேனுடைய குற்றத்தைப் பொறுத்தருள்வாயாக. எ.று.

      இலாஞ்சத்தைத் தொண்டை நாட்டுக் கடற்கரை நாட்டினர் கிளுவை என்று வழங்குவர். மணல் பரந்த கொல்லைகளில் இக்கிளுவை வேலியாக நடப்படும்; இதன் கொழுந்திலைகளைச் சிறுவர் கொய்து தின்பது வழக்கம். சிலம் - வில்வ மரத்தையும், விளா மரத்தையும் குறிக்கின்றது. மலம் - குற்றம். அறிவிலும் மனத்தினும் தூய்மையுடையரல்லாதார் நல்வழி மேற்கொண்டொழுகா ராகலின், “மலமில்லாத நல்வழி நடப்போர்” என்று சிறப்பித்து உரைக்கின்றார். அப் பெருமக்களின் தூய மனம் சிவபெருமான் எழுந்தருளும் ஏற்றமுடையதாகலின் “மனத்துள் மேவிய மாமணிச் சுடரே” என்று பரவுகின்றார். வன்மையான மரக்கலம் கொண்டு கடத்தற்குரிய பெருங்கடலை “வான்கடல்” எனவும் அதனைக் கலமின்றிக் கடப்பதென்பது ஆகாத தொன்றென்பது உலகறிந்த செயலாதலின், “வான்கடல் கலமிலாது கடப்பவன் போல்” எனவும் எடுத்துரைக்கின்றார். கடல் கடப்பார்க்குத் தெப்பம்போல இறைவன் திருவருள் பெற விழைவார்க்கு அவனுடைய திருவடியாகிய புணை இன்றியமையாதது என அறிந்தோர் உரைக்கின்றார். கடலாகிய உவமைக்குப் பொருள் பிறவி. பிறவிக் கடலை கடந்து இறைவன் திருவருளாகிய கரையை அடைய முயல்பவர்க்கு அவனுடைய திருவடிக் கமலங்கள் புணையாகும். அக் கமலங்களை வழிபாட்டினால் பற்றிக் கொள்வது, வலிய புணையைப் பற்றிக் கடல் கடக்க முயல்வது போலாம். அதனைச் செய்யாமல் நின் திருவருளைப் பெற முயல்வது அடியேன் குற்றமாம்; பொறுத்தருள்க என வேண்டுவாராய், “நவை பொறுத்தருள்வாய்” என்று நவில்கின்றார்.

      இதனால், கடல் கடக்க முயல்பவன் புணை பற்றுவது போல இறைவன் திருவருள் பெற முயல்பவன் அப்பெருமான் திருவடியை விடாது பற்றி வழிபடல் வேண்டும் என்பதாம்.

     (4)