1237. போர்க்கும் வெள்ளத்தில் பொன்புதைப் பவன்போல்
புலைய நெஞ்சிடைப் புனிதநின் அடியைச்
சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும்
சிறிய னேனுக்குன் திருவருள் புரிவாய்
கூர்க்கும் நெட்டிலை வேற்படைக் கரங்கொள்
குமரன் தந்தையே கொடியதீ வினையைத்
தீர்க்கும் தெய்வமே சைவவை திகங்கள்
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
உரை: கூர்மை பொருந்திய நெடிய இலையையுடைய வேற்படையைக் கையில் ஏந்துகின்ற குமாரக்கடவுட்குத் தந்தையே, கொடுமை புரிதற்குக் காரணமாகிய தீவினையை ஒழித்தருளும் தெய்வமே, சைவ நெறியும் வைதிக நெறியும் ஒப்ப நிலவும் திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாக நாயகனே, பெருகி வரும் வெள்ளக் காலத்தில் ஆற்றில் பொன்னைப் புதைப்பவனைப் போலப் புலைத்தன்மை பெருகிய நெஞ்சின்கண் புனிதனாகிய நினது திருவடியைச் சேர்த்து இருத்துமாறு நினைக்கின்றேன்; என்றாலும், சிறியனாகிய எனக்கு உன் திருவருளைப் புரிந்தருள்க.
தீட்டிக் கூர்மை செய்யும் செயலை ஈண்டுக் 'கூர்க்குதல்' என்று குறிக்கின்றார். வேற்படையின் இலைப்பகுதி நீண்டு இருத்தல் பற்றி, “நெட்டிலை வேல்” எனப்படுகிறது. குமரக் கடவுட்கு வேல் சிறப்புடைப் படையாதலால் அதனை விதந்து, “நெட்டிலை வேற்படைக் கரங்கொள் குமரன் தந்தையே” என்று கூறுகின்றார். தீவினைப் பயன் எதிருங் காலத்து மனமொழி மெய்களில் கொடுமை புரியப்படுதலால், 'கொடிய தீவினை' என்பதற்குக் கொடுமை புரிதற் கேதுவாகிய தீவினையென்று பொருள் கூறப்பட்டது. காரணமாகிய வினை நீங்கியபோது கொடுமை முதலிய துன்ப விளைவு இல்லாமை நோக்கி, “தீவினையைத் தீர்க்கும் தெய்வமே” என்று செப்புகின்றார். சைவம் சிவாகமத்தையும் வைதிகம் வேதமந்திரப் பிராமணங்களையும் பின்பற்றும் நெறியில் வேறாவது விளங்க, “சைவ வைதிகங்கள்” எனப் பிரித்தோதி, இரண்டும் ஒன்றையொன்று தழீஇச் சேரல் பற்றிச் “சைவ வைதிகங்கள் திகழும் ஒற்றியூர்” என்று இயம்புகின்றார். இருகரையும் தெரியாதவாறு பெருவெள்ளம் மிக்கு வரும்போது அதனைப் “போர்க்கும் வெள்ளம்” என்பர். வெள்ளம் பெருகியோடும் போது புதைக்கப்படும் எப்பொருளும் அலைத்துக் கொண்டோடப்படுமாக, கிடைத்தற்கு அரிய பொன் கனவியதாயினும் வெள்ளத்தால் கெடுவது நினையாது புதைப்பவன் படுமூடன் என்பது விளங்க, “போர்க்கும் வெள்ளத்தில் பொன் புதைப்பவன்” என்றும், அவனது நெஞ்சம் அறியாமை யிருளால் அடைபட்டிருப்பது போல எனது நெஞ்சம் அறியாமையே யன்றிப் புலைத்தன்மைகள் அனைத்தும் நிறைந்தது என்பாராய், “புலைய நெஞ்சிடை” எனவும், அதன்கண் நினது தூய திருவடியை நிலையுறச் சேர்க்க முயல்கின்றேன் என்பார், “புனித நின் அடியைச் சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன்” எனவும் உரைக்கின்றார். நின் திருவடியை என் நெஞ்சின்கண் நிலைபெற நிறுத்துகின்றேன் எனினும், புலையெண்ணங்கள் வெள்ளம்போற் பெருகி வந்து நின் திருவடி நில்லாவாறு அலைத்தொழிக்கும்; ஆயினும், திருவருள் செய்வையேல் அது நிலைபெறும் என்பது தோன்றச் “சிறியேனுக்கு உன் திருவருள் புரிவாய்” என்று முறையிடுகின்றார்.
இதனால், என் மனம் புலை யெண்ணங்கள் பெருகிப் பாயும் ஆறு போலினும் இதனிடைப் பொன்னைப் புதைப்பது போல் உன் திருவடியை நிறுத்துகின்றேன்; நீங்காவாறு அருளுக என்பதாம். (5)
|