1238.

     ஓட உன்னியே உறங்குகின் றவன்போல்
          ஓங்கும் உத்தம உன்அருட் கடலில்
     ஆட உன்னியே மங்கையர் மயலில்
          அழுந்து கின்றஎற் கருள்செய் நினைவாய்
     நாட உன்னியே மால்அயன் ஏங்க
          நாயி னேன்உளம் நண்ணிய பொருளே
     தேட உன்னிய மாதவ முனிவர்
          திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.

உரை:

      தேடியறியச் செய்யும் பெரிய தவத்தையுடைய முனிவர்கள் விளங்கும் திருவொற்றியூரில் எழுந்தருளிய தியாகநாயகனே, ஞானத்தால் நாடக் கருதிய திருமாலும் பிரமனும் மாட்டாமையால் ஏக்கமடைய நாயினேனுடைய மனத்தை யடைந்திருக்கின்ற பரம்பொருளே, ஓடற்கு நினைத்துக் கீழே கிடந்து உறங்குகிறவன் போல, எல்லாப்பொருளிலும் மிக்கு ஓங்கிய உத்தமனே, உனது அருட்கடலில் திளைத்தாட நினைத்து மகளிரது காமமயக்கமாகிய கடலில் அழுந்தி மடியும் எனக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொள்ள வேண்டும். எ.று.

     நாடுதல் - ஞான நாட்டம் கொண்டு அறிதல். மாலும் அயனும் முறையே பசுஞான பாசஞான வடிவங்களாதலின், சிவஞான நாட்டம் பெறாது வருந்துமாறு விளங்க “நாடவுன்னியே மாலயன் ஏங்க” என்றும், அடியேன் திருவுள்ளத்தில் எழுந்தருளி ஏற்புழி நல்லறிவு தந்து தனது உண்மை புலப்படுத்தும் நலம் பற்றி, “நாயினேன் உளம் நண்ணிய பொருளே” என்றும் எடுத்துரைக்கின்றார். முனிவர் மாதவம் உடையராதற்குக் காரணம் சிவபெருமான் உறையுமிடம் கண்டு தேடியடைதற் கென்பது பற்றி, “தேடவுன்னிய மாதவ முனிவர்” என்று சிறப்பிக்கின்றார். ஓடற்கு எண்ணியவன் அது செய்யாது ஓர் இடத்திற் கிடந்து உறங்குவானாயின், எண்ணம் பழுதுற்று வருந்துவன் என்பது உலகுரை. அதுகொண்டு தமது நிலையினை விளக்குகின்றார் வடலூர் வள்ளல். இறைவன் திருவருட் கடலில் படிந்து திளைத்து மகிழ எண்ணிய யான் அது செய்யாமல், மகளிர் நல்கும் காம மயக்கமாகிய கடலில் வீழ்ந்து அழுந்திக் கெடுகின்றேன் என்று உரைப்பாராய், “உத்தம, உன் அருட்கடலில் ஆடவுன்னியே மங்கையர் மயலில் அழுந்துகின்ற எற்கு” என இயம்புகின்றார். இறைதிருவருள் ஞானமயமாதலால், அருள் பெறின், மகளிர் மயற்கடலில் வீழாது ஞானவின்பம் பெறுவேன் என்பாராய், “எற்கு அருள்செய நினையாய்” என்று இசைக்கின்றார். நினைவும் மொழியும் செயலும் வேறுவேறாய் இயலும் நம்மனோர் போலாது நினைத்தலும் செய்தலும். இறைவற்கு உடனிகழ்வனவாதல் பற்றி, “நினைவாய்” என மொழிகின்றார்.

     இதனால், ஓடக் கருதியவன் அதனை விடுத்து உறங்குவது போல இறைவன் அருள் விழைந்து மகளிர் மயலில் வீழ்ந்து அலமருகின்ற எனக்கு அருள் புரிய நினைந்தருள்க என வேண்டியவாறாம்.

     (6)