1239.

     முதல்இ லாமல்ஊ தியம்பெற விழையும்
          மூடன் என்னநின் மொய்கழல் பதமேத்
     துதல்இ லாதுநின் அருள்பெற விழைந்தேன்
          துட்ட னேன்அருட் சுகம்பெறு வேனோ
     நுதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே
          நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே
     சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும்
          திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.

உரை:

      நெற்றியில் நெருப்புக் கண்ணையுடையவனே, ஞானக் கண்ணாற் பார்க்கும் மெய்யன்பர்கள் பருகித் தேக்கெறியும் இனிய அமுதமானவனே, கெடுவதில்லாத வளம் மிக்கு எக்காலத்தும் விளங்கும் திருவொற்றியூரில் எழுந்தருளியுள்ள தியாக நாயகனே, முதல் இல்லாமல் ஊதியம் பெற விரும்பும் மூடனைப் போல நின்னுடைய வலிமிக்க கழலணிந்த திருவடியை ஏத்தாமல் நினது திருவருளைப் பெற விரும்பின துட்டனாகிய யான் நினது அருள் வழிப் பெருகும் சுகவாழ்வைப் பெறுவேனோ? எ.று.

     நுதல் - நெற்றி. ஆர் அழல் - நிறைந்த நெருப்பு. மெய்யன்பர்கள் சிவனை நோக்குவது சிவஞானமாகிய ஞானக்கண்ணாலென அறிக. “ஊனக்கண் பாசம் உணராப் பதியை, ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி” எனச் சிவஞானபோதம் உரைப்பது காண்க. ஞானக்கண்ணால் நோக்குவார்க்குச் சிவம் ஞானவின்பப் பேரமுதாய் மகிழ்வு நல்குதலின், “நோக்கும் அன்பர்கள் தேக்கும் இன்னமுதே” என்று நவில்கின்றார். சிதல் - சிதைதல், வளம் ஓங்கினாலன்றி எக்காலத்தும் வாழ்வு இன்பம் பயவாதென்பது பற்றி, “சிதலிலா வளம் ஓங்கி எந்நாளும் திகழும் ஒற்றியூர்” என்று சிறப்பிக்கின்றார். “முதலிலார்க்கு ஊதியமில்லை” என்பது பழமொழி. இதனைத் திருவள்ளுவர், பெரியோர் துணையாகிய சார்பிலார்க்கு நிலையில்லை என்பதை விளக்க “முதலிலார்க்கு ஊதியமில்லை” என எடுத்தோதுகின்றார். அதுபோலவே வள்ளற்பெருமான், இறைவன் திருவடியை ஏத்துவது முதல் என்றும், அஃது இல்லார்க்கு அவன் திருவருளாகிய ஊதியமில்லை என்றற்கு, “முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழற்பதம் ஏத்துதல் இலாது நின் அருள் பெற விழைந்தேன்” என்று விளம்புகின்றார். முதலில்லை யாயின் ஊதியமில்லை என்பது யாவரும் அறிந்தது; அறியாதவன் மூடனாதலின், தன்னை “மூடன்” என மொழிகின்றார். உற்றாரைத் தாங்குதற்கென அமைந்த திருவடியை “மொய்கழல் பதம்” என மொழிகின்றார். “உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்” என நக்கீரர் நவில்வது காண்க. கழல் அணிந்தமை பற்றிக் “கழற்பதம்” என்று உரைக்கின்றார். இறைவன் அருட்பேற்றுக்கு வாய்த்த செயலாதலின், “கழற்பதம் ஏத்துதல் இலாது அருள் பெற விழைந்தேன்” என்று அறிவிக்கின்றார். தீச்செயல் புரிபவனை வடமொழியில் துட்டன் என்பர். துட்டர்க்கு இன்ப வாழ்வு இல்லையாதல் கண்டு, “நின் அருட் சுகம் பெறுவேனோ” என ஐயுறுகின்றார்.

     இதனால், முதலிலார்க்கு ஊதியம் இல்லாதவாறு போல இறைவன் திருவடிகளைப் பரவுதல் இல்லாதார்க்கு அருளின்ப வாழ்வில்லை என்பதுணர்த்தியவாறாம்.

     (7)