124.

    வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
        வருந்துகின்றே னென்றலறு மாற்றம் கேட்டும்
    எந்தாய் நீ யிரங்காம லிருக்கின்றாயால்
        என்மனம்போ னின்மனமும் இருந்த தேயோ
    கந்தாவென் றுரைப்பவர்தம் கருத்துள் ளூறும்
        கனிரசமே கரும்பே கற்கண்டே நற்சீர்
    தந்தாளும் திருத்தணிகை மணியே சீவ
        சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

உரை:

     நல்ல புகழ்களை அன்பர்களுக்குத் தந்து ஆதரிக்கும் தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, கந்தா என்று சொல்லி வழிபடுவோர் மனத்தினுள் சுரந்து இன்பம் செய்யும் கனிரசம் போல்பவனே, கரும்பும் கற்கண்டும் போல் இனிப்பவனே, என் முன் வந்து ஆண்டருள்க என்றும், ஐயாவோ என்றும், வஞ்சகர் கூட்டத்துட்பட்டு வருந்துகிறேன் என்றும், அலறிப் புலம்பும் என் சொற்களைச் செவியிற் கேட்டும் நீ இரங்காமல் இருக்கின்றாயே, எந்தையே, என் புல்லிய மனம் போல நினது நல்ல மனமும் இருந்தொழிந்ததோ, அறிகிலேன், எ. று.

     அன்பால் வழிபடுவோர் இம்மையிற் பெறலாவது நல்ல புகழாதலால், “நற்சீர் தந்தாளும் திருத்தணிகை மணியே” என்று நவில்கின்றார். கந்தன் - பற்றுக் கோடானவன். இதனை வடசொற் சிதைவாகக் கொண்டு புராணக்கதை யுரைப்பதுமுண்டு. முருகப் பெருமானை மனத்தால் நினைந்து கந்தா என்று நாவாற் சொல்லி மெய்யால் வணங்குபவர் உள்ளத்தில் அவனது திருவருள் இனிக்கும் தேனாய்ச் சுரந்து மகிழ்விப்பது பற்றிக் “கந்தா என்றுரைப்பவர் தம் கருத்துள் ஊறும் கனிரசமே கரும்பே கற்கண்டே” என்று உரைக்கின்றார். திருவருள் நல்கும் இன்சுவை இது போல்வ தெனத் திட்டமாக வுரைக்க வொண்ணாதாதலால் கனிரச முதலாய வற்றைச் சொல்லி இன்புறுகின்றார். இனம் சூழ அதன் இடையிருந்து வாழ்வது மக்கட் பண்பு; அதனால் தாம் சேர்ந்து வாழும் இனத்தைக் காணும் வள்ளற் பெருமான் அதன் கண் மிக்கிருக்கும் வஞ்சங்களை யறிந்து, அவற்றான் எய்தும் துன்பங்களை நினைந்து, நெஞ்சம் அஞ்சி, அவ்வினத்தினின்றும் நீங்கி யொழியக் கருதி, மாட்டாமை பற்றி முருகப் பெருமானைத் துணை புரிய வேண்டி “வஞ்சர் தம்பால் வருந்துகின்றேன், வந்தாள்வாய் ஐயாவோ” என்று இறைஞ்சுகிறார். வருந்தி யழைத்தும் தாயர் வாராமை கண்டு அலறியழும் இளங் குழவி போல அலறிப் புலம்புகிறார். முருகப் பெருமான் எழுந்தருளாமை எண்ணி, எனது அலறு குரல் கேட்டும் இரக்க மின்றி இருக்கின்றாயே என்பாராய், “அலறும் மாற்றம் கேட்டும் எந்தாய் நீ இரங்காமல் இருக்கின்றாயால்” என இயம்புகின்றார். மனம் என்னும் உட்கருவி யாவர்க்கும் ஒன்றென்பது நினைவிற்கு வர, பிறரது இரக்கக் குரல் கேட்டும் செவியிற் கொள்ளா தொழியும் என் மனம் போல உன்னுடைய மனமும் கொள்ளா தாயிற்றோ என்பாராய், “என் மனம் போல் நின் மனமும் இருந்த தேயோ” என்று கூறுகின்றார்.

     இதனால், வஞ்சகரினத்தைச் சேர்ந்திருந்து அதனின் நீங்குதற்கு வேண்டும் மனவலி வேண்டி வள்ளலார் அமுது தணிகை முருகனிடம் முறையிடுமாறு காணலாம்.

     (22)