1240. கல்லை உந்திவான் நதிகடப் பவர்போல்
காமம் உந்திய நாமசெஞ் சகத்தால்
எல்லை உந்திய பவக்கடல் கடப்பான்
எண்ணு கின்றனன் எனக்கருள் வாயோ
அல்லை உந்திய ஒண்சுடர்க் குன்றே
அகில கோடிகட் கருள்செயும் ஒன்றே
தில்லை நின்றொளிர் மன்றிடை அமுதே
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
உரை: இருளைப் போக்கிய ஒள்ளிய சுடர் விடும் குன்று போல்பவனே, அகிலவுலகங்களில் வாழும் கோடிக்கணக்கான உயிர்கட்கு அருள் புரியும் ஒரு பெரும்பொருளே, தில்லைநகர்க்கண் நின்று விளங்கும் சபையின்கண் ஆடல்புரியும் அமுது போன்றவனே, சீர் விளங்கும் திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் தியாக நாயகனே, கல்லைப் புணையாகக் கொண்டு பெருநதியைக் கடப்பவன்போலக் காமமாகிய கல்லாற் பிணிப்புண்ட அச்சம்தரும் நெஞ்சினைக் கொண்டுஅறிவொளியை மறைத்த பிறவிக்கடலைக் கடத்தற்கு எண்ணுகின்ற எளியேனுக்கு அருள் புரிவாயோ? எ.று.
அல் - இருள். உந்துதல் - போக்குதல், ஒளி முன் இருள் நில்லாமை பற்றி, “அல்லையுந்திய ஒண்சுடர்” என்றும், என்றும் புலராது எத்தனை கோடி ஆண்டுகள் கழியினும் நின்று ஒளி செய்யும் நீர்மைபற்றி, “ஒண்சுடர்க் குன்றே” என்றும் உரைக்கின்றார். அகில கோடி - அகில வுலகங்களிலும் வாழும் அளவிறந்த உயிர்த்தொகை. அனைத்துயிர்க்கும் எஞ்சுதலின்றி அருள் புரிதல்பற்றி, “அருள்செயும் ஒன்றே” என்று இசைக்கின்றார். பரம்பொருள் ஒன்றாதல்பற்றி “ஒன்றே” என்கின்றார். தில்லைப் பதியில் திருமூலட்டானத் திருக்கோயில் இருப்பினும் திருமன்று சிறந்து விளங்குதலால் “தில்லைநின் றொளிர் மன்று” என்றும், அதன்கண் நிகழும் திருக்கூத்து இன்பமயமாதல் பற்றி, “அமுதே” என்றும் இயம்புகின்றார். ஆழ்ந்த ஆறு என்றற்கு “வான்நதி” என்றும் அதனைப் புணைகொண்டு கடப்பவர் கற்புணை கொள்ளாராதலால், “கல்லை யுந்தி வான்நதி கடப்பவர்போல்” என்றும் உரைக்கின்றார். கற்புணை நீந்தாவாறு நீர்க்குள் மூழ்குவித்தல்போல் காமம் கன்றிய நெஞ்சமும் காமக்கடற்குள் மூழ்குவது விளங்க, “காமம் உந்திய நாம நெஞ்சகம்” என்றும், காமம் கதுவிய நெஞ்சால் துன்பம் விளைதற்கு அஞ்சி “நாம நெஞ்சகம்” என்றும் கூறுகின்றார். காமம் பிறவிக் கேதுவாதலின், பிறவி யொழிப்பார்க்கு அஃது ஆகாது என்பதுபற்றிக் “காம முந்திய நெஞ்சகத்தால் பவக்கடல் கடப்பான் எண்ணுகின்றனன்” என்று இசைக்கின்றார். ஞானம் பெறாவாறு தடை செய்தலின், “எல்லையுந்திய பவக்கடல்” என மொழிகின்றார். எல் - ஒளி; ஈண்டு ஞானவொளியின் மேற்று. பவம் தருபவனும் அதனைத் தீர்த்தருள்பவனும் சிவபரம்பொருளாதலின் “எனக்கு அருள்வாயோ” எனக் கேட்கின்றார். ஒன்றைச் சாதித்துக் கொள்பவர் அதற்குத் துணையாவது நாடலைவிட்டு மாறாயது நாடுதல் குற்றம்; அதனைச் செய்யும் எனக்கு நீ அருளுவாயோ என்று முறையிடுவதுமாம்.
இதனால், காம நெஞ்சுடையார் பவக்கடல் கடத்தல் இல்லை என்றதாம். (8)
|