1241.

     நெய்யி னால்சுடு நெருப்பவிப் பவன்போல்
          நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த
     பொய்யி னால்பவம் போக்கிட நினைத்தேன்
          புல்ல னேனுக்குன் நல்அருள் வருமோ
     கையி னால்தொழும் அன்பர்தம் உள்ளக்
          கமலம் மேவிய விமலவித் தகனே
     செய்யி னால்பொலிந் தோங்கிநல் வளங்கள்
          திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.

உரை:

     கைகுவித்துத் தொழுகின்ற அன்பரது உள்ளத்தாமரையில் எழுந்தருளிய தூய வித்தகனே, வயல்களால் பொலிந்து உயர்ந்து நல்வளம் உற்றுத் திகழும் திருவொற்றியூர்க்குரிய தியாக நாயகனே, சுடுகின்ற நெருப்பை நெய் பெய்து அவிக்க முயலும் மூடனைப்போல் நீண்ட துன்பத்து கேதுவாகிய கொடியன நிறைந்த பொய்களை யுரைத்துப் பிறவித் துன்பத்தைப் போக்க நினைக்கின்றேன்; புல்லியேனாகிய எனக்கு உனது நல்ல அருள் கிடைக்குமோ? எ.று.

     கையினால் தொழும் அன்பர் - கைகுவித்துத் தொழும் மெய்யன்பர், தொழுவது கையாதலின், கையினால் தொழும் அன்பர் என்பதற்கு இவ்வாறு பொருள் காணப்பட்டது. மெய்யன்பர்களின் உள்ளத்தாமரை சிவனுறையும் கோயிலாதலால், “உள்ளக் கமலம் மேவிய வித்தகனே” என்று கூறுகின்றார். விமலம் - மலமில்லது. இறைவன் மலக்கலப்பில்லாதவனாதலால் 'விமலன்' எனப்படுகின்றான்; ஞானப்பொருள் என்பது பற்றி 'வித்தகன்' என்கின்றார். செய் - வயல்; நன்செய், புன்செய் என வழங்குவது காண்க. ஊர் அருகே நன்செய் வயல் உடைமை பற்றி, ஒற்றியூர் செய்யினாற் பொலிந்து ஓங்குகிறது என்றும், வயல்களும் வளம் மிக்கன எனற்கு “நல்வளங்கள் திகழும் ஒற்றியூர்” என்றும் உரைக்கின்றார். அருகே நன்செய் வயல்களை யுடையதையே ஊர் என்பது தமிழ் மரபு; கோவூர், குன்றூர் முதலியன காண்க. கனன்றெரியும் நெருப்பு என்றற்குச் சுடுநெருப்பு என்றும், அதனை மண்ணோ நீரோ பெய்து அவிப்பது முறையேயன்றி நெய் பெய்து அவிப்பது அதனை மிகவும் மூண்டெரியச் செய்யும் செயலாம்; அதனை நினையாது நெய் பெய்து எரியை அவிக்க முயல்வது மூடர் செயலாம்; எரி அவித்தற்கு நெய் பயன்படாது என்பது மக்கள் பலரும் அறிந்த பழமொழி; திருவள்ளுவர், “நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்றால்” (குறள்) என்றனர். மிக்குற்ற துன்பத்தைப் பொய் முதலிய குற்றங்களாற் போக்க முயலும் தீச்செயல், அத் துன்பங்களை மேன்மேலும் மிகுவிக்குமே யல்லது போக்குதல் இல்லை என்ற உண்மையை விளக்கலுறும் வடலூர் வள்ளல், “நெய்யினால் சுடுநெருப் பவிப்பவன்போல்” என்றும், “நிறைந்த பொய்யினால் பவம் போக்கிட நினைத்தேன்” என்றும் உரைக்கின்றார். இச் செயலால் பவம் நீங்காது என்று உணர்கின்றமை புலப்பட, “புல்லனேனுக்குன் நல்லருள் வருமோ” எனக் கூறுகின்றார். நல்லருள் எய்தினாலன்றிப் பவம் கடியும் ஞானம் உண்டாகாமையின் “நல்லருள் வருமோ” என வினவுகின்றார்.

     இதனால், நெய் பெய்து எரியவிப்பவன்போல் நிறைந்த பொய்யைச் சொல்லிப் பவம் கெடுக்க முயல்கின்றேன் என்கின்றாராம்.

     (9)