1242.

     நீர்சொ ரிந்தொளி விளக்கெரிப் பவன்போல்
          நித்தம் நின்னிடை நேசம்வைத் திடுவான்
     பார்சொ ரிந்திடும் பவநெறி முயன்றேன்
          பாவி யேன்தனைக் கூவிநின் றாள்வாய்
     கார்சொ ரிந்தெனக் கருணைஈந் தன்பர்
          களித்த நெஞ்சிடை ஒளித்திருப் பவனே
     தேர்சொ ரிந்தமா மணித்திரு வீதித்
          திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.

உரை:

      கருமுகில் மழை பொழிவது போலக் கருணையைப் பொழிந்து அதனால் களிப்பு மிக்குற்ற அன்பரது நெஞ்சின்கண் மறைந்திருப்பவனே, தேர்கள் உலவுதலால் அவற்றினின் றுதிர்ந்த மணிகள் கிடந் தொளிரும் தெருக்களால் விளங்கும் திருவொற்றியூர்த் தியாக நாயகனே, நெய் பெய்யாது நீர் பெய்து ஒளிதரும் விளக்கினை எரிக்க முயலும் மூடனைப் போல நாளும் நின்பால் அன்புசெய்யக் கருதி உலக வாழ்வு நல்கும் பவநெறிக்கண் முயல்கின்றேன்; பாவியாகிய என்னைக் கூவியழைத்து ஆட்கொள்வாயாக. எ.று.

     கருணை புரிவதில் சிவன் கார்முகிலை நேர்பவன் என்றற்குக் “கார் சொரிந்தெனக் கருணை ஈந்து” என்றும், கருணை பெற்ற மெய்யன்பர் சிவானந்த மிகுதியால் உவகை மிக்கிருப்பராதலின், “அன்பர் களித்த நெஞ்சிடை” என்றும், இறைவன் அன்பரது நெஞ்சின்கண் உறைவதை அந்த அன்பர் தாமும் அறியார்; அவர் அறியாமலே வந்திருப்பது இறைவன் இயல்பு என்ற உண்மை புலப்பட, “அன்பர் நெஞ்சிடை ஒளித்திருப்பவனே” என்றும் இயம்புகின்றார். தேர் செல்லுமிடத்து அவற்றிற் கட்டிய மணிமாலை அறுப்புண்டலின் மணிகள் தெருக்களில் சிதறி வீழ்ந்து ஒளிவிட்டுத் திகழ்தல் தோன்ற, “தேர் சொரிந்த மாமணி திருவீதித் திகழும்” என்று தெரிவிக்கின்றார். ஒளிவிளக் கெரிப்போர் நெய் பெய்வரேயன்றி நீர் பெய்யார்; அதனால் விளக்கெரியாது என்பது உலகறிந்த உண்மை. நீர் ஊற்றி விளக்கெரிக்க ஒருவன் முயல்வானாயின், அவனை மூடனென்றே உலகு தூற்றும்; அந்த மூடனது செய்கையைத் தமது செயலொன்றிற்கு உவமமாக நிறுத்தி, “இறைவன்பால் மெய்யன்பு செய்ய விரும்புவன் உலகியல் ஆசைவழிச் செல்லலாகாது; யான் ஆசைவழி யுழல்கின்றேன்” என மொழிந்து, என் செயல் பாவம் என்பார், “பாவியேன்” என்றும், என்னைக் கூவியழைத்து நெறிக்கண் செலுத்துக என்பார், “என்னைக் கூவி நின்றருள்வாய்” என்றும் வேண்டுகின்றார். பார் - உலகம். பிறப்பிறப்பாகிய பவத்துக்குரிய இடம் பாருலக மாதலால், உலகியல் நல்கும் இன்பமே நுகர்ந்து அதற்கமைந்த நெறியிலே சென்ற தம் இயல்பை, “பார் சொரிந்திடும் பவநெறி முயன்றேன்” என்று பகர்கின்றார்.

     இதனால், இறைவனிடத்து மெய்யன்புடையனாக வேண்டின் உலகியற் பவநெறியின் நீக்குதல் வேண்டும் என்பது வற்புறுத்தவாறாம்.

     (10)