1244. ஒளியாய் ஒளிக்குள் ஒளிர்ஒளி யேஒற்றி உத்தமநீ
அளியா விடில்இதற் கென்னைசெய் கேன்அணங் கன்னவர்தம்
களியால் களித்துத் தலைதெரி யாது கயன்றுலவா
வளியாய்ச் சுழன்றிவண் மாயா மனம்எனை வாதிப்பதே.
உரை: ஒளியாகவும், ஒளியாகிய அப்பொருட்கும் உள்ளொளி யாகவும் விளங்கும் ஒளிப்பொருளே, திருவொற்றியூரில் எழுந்தருளும் உத்தமனே, அணங்கு போன்ற மகளிர் தரும் காமக் களிப்பால் மயங்கித் தலைகால் தெரியாமல் அறிவு மெலிந்து கெட்டுக் காற்றாய் அலைந்தும் மாய்ந்தொழியாத என் மனம், இங்கே என்னோடு வாதிட்டு வருத்துவதால், நீ அருள் புரியா விட்டால் இதன் பொருட்டு யான் யாது செய்வேன்? எ.று.
சேய்மையில் நின்று நோக்கின் ஒளியாயும், அணிமை நோக்கிற்கு ஒளிக்குள் ஒளியாயும் ஒளிர்வது விளங்க, “ஒளியாய் ஒளிக்குள் ஒளிர் ஒளியே” என வுரைக்கின்றார். முன்னைப் பாட்டில் “கிளர் ஒளி” என்றாராகலின், இப்பாட்டில் அவ்வொளி கிளர்ந்தெழுதற்குக் காரணமாய் உள்ளீடுமாவது சிவத்தின் உள்ளொளி யென்பார், “ஒளியாய் ஒளிக்குள் ஒளிர் ஒளி” என இயம்புகின்றார். “துஞ்சு நாள் துறந்து தோற்றமு மில்லாச் சுடர்விடு சோதியெம் பெருமான்” (பாம்பு) என ஞானசம்பந்தர் நவில்வர். அணங்கு - நோய் செய்யும் தெய்வ மகள்; தோற்றத்தாலும் வனப்பாலும் கண்டார் உள்ளத்தே காமநோயை உறுவித்து வருத்துவது அவள் செயலாதல் பற்றி, அத் தெய்வ மகளைத் “தாக்கணங்கு” என்பர் திருவள்ளுவர். இவ்வண்ணம் காண்பவர் கருத்தில் காம விச்சையைத் தோற்றுவிக்கின்ற
இளமகளிரை “அணங்கனையார்” என்றும், அணங்கன்னார் என்றும், கூறுவது புலமை மரபு. கள்ளுணவாற் களிப்புற்று மயங்குவாரைப் போல அணங்கனைய மகளிரின் காமக் கலப்பால் எய்தும் மயக்கத்தை “அணங்கன் னவர்தம் களியால் களித்து” எனவும், தொடக்கமும் முடிவும் காணாது சுழன்றலையும் செயலைத், “தலை தெரியாது” எனவும், அதனால் எய்தும் மெலிவைக் “கயன்று” எனவும் கூறுகின்றார். கயலுதல் - கிடந்தாங்கு கிடவாமற் புரளுதல். 'வளியாய் உலாவச் சுழன்று' என இயையும். ஆய், உவமைப் பொருட்டு. உலவிச் சுழன்றும் எனக் கொள்க. இவண் - இவ்வுலகில். மனம் தளர்வுற்றுக் கெட்டு செயலற் றொழியாமல் என்னைத் தாக்கி வருத்திய வண்ணமுளது என்பார், “மனம் மாயா வாதிப்பதே” என்கின்றார். அறிவு மனத்தை அடக்குவதும், மனம் அடங்காமற் துள்ளித் துடிப்பதும் தோன்ற “வாதிக்கிறது” எனக் குறிக்கின்றார்.
இதனால், காமக் களிப்பால் மனத்தின் அடங்காத் தன்மையை உரைத்தவாறாம். (2)
|