1246. மலஞ்சான்ற மங்கையர் கொங்கையி லேநசை வாய்த்துமனம்
சலஞ்சான்ற தால்இதற் கென்னைசெய் கேன்நின் சரண்அன்றியே
வலஞ்சான்ற நற்றுணை மற்றறி யேன்ஒற்றி வானவனே
நலஞ்சான்ற ஞானத் தனிமுத லேதெய்வ நாயகனே.
உரை: திருவொற்றியூரில் எழுந்தருளுகின்ற தேவ தேவனே, நன்மையமைந்த சிவஞானத்தின் தனிமுதற் பொருளாய்த் தெய்வங்கட்கெல்லாம் தலைவனாக விளங்குபவனே, மலம் நிறைந்த மகளிருடைய கொங்கைகளில் என் மனம் ஆசை வைத்து அவற்றையே சூழ்ந்து கிடக்கின்றது; வன்மை மிக்க நல்ல துணை உனது திருவடியல்லது வேறு அறியேனாதலால், அதனை நினைந்தொழுகுமாறு என் மனத்தைப் பணித்தருள்க; யான் செய்வ தொன்றுமில்லை. எ.று.
வானவன் தெய்வம் என்னும் பொதுப்பொருள் குறித்து நின்றது. “செஞ்சடை வானவர்” (பெரிய - திருநாவுக்) என்று சேக்கிழாரும், “வானவனை மாதியலும் பாதியனை” (அம்மானை) என்று மணிவாசகரும் பிறரும் உரைப்பது காண்க. “நலஞ்சான்ற ஞானம்” என்பதனால் சிவஞானம் என்பது பெறப்பட்டது. பசுபாச ஞானங்களின் வேறாப் பரஞானத் தனிப்பொருளாய் விளங்குதலால், “ஞானத் தனிமுதல்” என்று சிறப்பிக்கின்றார். அஞ்ஞானத்தை விளைவிக்கும் காம இச்சையைக் கடியும் கருத்தொடு சிவத்தின் திருவடியை நினைக்கின்றாராதலின், ஞானப்பொருள் பற்றிய நினைவு வள்ளற்பெருமான் உள்ளத்தில் மேம்பட்டுத் தோன்றுகிறது. தாய்மைக்குரிய தகவுறத் தோன்றி, மகப் பேற்றுக்குரிய ஆண்மைப் பொருளின் மனங் கவர்க்கும் மாண்புடைமை பற்றி, மங்கையர் கொங்கையை மனஞ் சூழ்வது இயல்பாதலின், “மங்கையர் கொங்கையிலே நசை வாய்த்து மனம் சலஞ் சான்றதால்” என்று உரைக்கின்றார். மங்கைப் பருவத்து உடலிடத்து மல மிகுதி புலப்பட, “மலஞ் சான்ற மங்கையர்” என்றும், காண்பார் கருத்தை அவர் அறியாமலே யீர்க்கும் இயல்புடைமை விளங்க, “நசை வாய்த்து” என்றும், அறிவு இடைபுகுந்து நிறுத்தினும் நில்லாது மனம் சூழ வருவது புலப்பட, “மனம் சலஞ் சான்றதால்” என்றும் கூறுகின்றார். சலம் - பிடிவாதம். இது திருவருள் இயக்கமாதலின், தனது மாட்டாமைப் புலப்பட “என்னை செய்கேன்” என வருந்துகிறார். இந் நிலையில் தமது மனத்தை வன்மையுடன் நிறுத்தி நன்னெறிப் படுத்தற்கு நல்ல துணையாவது இறைவன் திருவடி யல்லது பிறிது யாதும் இல்லையெனத் தெளிகின்றமை புலப்பட, “நின் சரண் அன்றியே வலஞ் சான்ற நற்றுணை மற்றறியேன்” என்று விளம்புகிறார்.
இதனால், மனத்தைச் செந்நெறிப் படுத்தற்கு வன்மை சான்ற துணையாவது இறைவன் திருவடியே என்பது தெளியப்பட்டமை யுரைத்தவாறாம். (4)
|