1247. நாயினும் கீழ்ப்பட்ட என்நெஞ்சம் நன்கற்ற நங்கையர்பால்
ஏயினும் செல்கின்ற தென்னைசெய் கேன்உனை ஏத்தியிடேன்
ஆயினும் இங்கெனை ஆட்கொளல் வேண்டும்ஐ யாஉவந்த
தாயினும் நல்லவ னேஒற்றி மேவும் தயாநிதியே.
உரை: திருவொற்றியூரில் எழுந்தருளும் அருட் செல்வமே, ஐயனே, எது செய்யினும் மகிழும் தாயினும் நல்ல பெருமானே, நாயினும் கடைப்பட்டதாகிய எனது மனம் நலமில்லாத மகளிரை நோக்கி எய்யப்பட்ட அம்புபோற் சென்று பாய்கிறதாதலால், இதற்கு யான் என்ன செய்வேன்; உன்னை நாளும் வழிபடாதவனாயினும், இப்பொழுது இவ்வுலகில் என்னை ஆட்கொண்டருள வேண்டுகிறேன். எ.று.
திருவருட் செல்வம் என்பது 'தயாநிதி' என மொழி பெயர்க்கப்பட்டு வழங்குகிறது. அருளை முதலாகவுடைய அறநெறியைத் “தயா மூலதன்மம்” என மொழி பெயர்த்துரைப்பதுபோல. “தயா மூல தன்ம வழி யெனக்கு நல்கி” (திருமழ) எனத் திருநாவுக்கரசர் மொழிவது காண்க. தான் பெற்ற சேய் தவறு செய்யினும் பொறுத்துத் தனது உள்ளத்துப் பெருகும் அன்பினால் உவகையுற்று மகழும் தாயினும், ஞான வாய்மை ஒழுக்கம் கண்டு அருள் ஞானம் வழங்கும் உவந்த உள்ளத்தனாதல் பற்றிச் சிவனை, “உவந்த தாயினும் நல்லவனே” எனப் போற்றுகின்றார். “தாயினும் நல்ல தலைவர் என்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள், வாயினும் மனத்தினும் மருவி நின்று அகலா மாண்பினர்” (திருக்கோண) என்று ஞானசம்பந்தர் கூறுவது காண்க. புலைத்தன்மைபற்றி, நாய் கீழ்ப்பட்டதாகக் கருதப்படுகிற தென்க. தம்மைக் காமுறும் ஆடவர் மனத்தைத் தம் நலமல்லது பிற நலங்களை நினைய விடாமல் தடுக்கும் சொல்லும் செயலுமுடைய மங்கையரை, “நன்கு அற்ற நங்கையர்” என்றும், அவரது மென்மை யுருவில் விரைந்து சென்று பாய்வதுபற்றி, “என் நெஞ்சம் ஏயினும் செல்கின்றது” என்றும் கூறுகின்றார். உடம்பைத் 'தனு' என்பவாகலின், அதனிடத்திருந்தும் செல்லம் மனத்தினை “ஏய்” (அம்பு) என்று மொழிகின்றார். தடுக்கும் வன்மையின்மை தோன்ற, “என்னை செய்கேன்” எனவும், திருவருட்பேற்றுக் கேதுவாகிய வழிபாட்டினைத் தான் செய்ததில்லை யாயினும், அதுபற்றி வேற்றுமை நோக்காது தனக்கு அருள்வலி நல்க வேண்டும் என்பாராய், “ஏத்தி யிடேன் ஆயினும் இங்கு எனை ஆட்கொளல் வேண்டும்” எனவும் வேண்டுகின்றார்.
இதனால், மனத்தின் கடுமை புலப்படுத்தி ஆட்கொளல் வேண்டுமென இறைஞ்சியவாறாம். (5)
|