1248. நிதியேநின் பொன்னடி ஏத்தாது நெஞ்சம் நிறைமயலாம்
சதியே புரிகின்ற தென்னைசெய் கேன்உனைத் தாழலர்தம்
விதியே எனக்கும் விதித்ததன் றோஅவ் விதியும்இள
மதியேர் சடைஅண்ண லேஒற்றி யூர்ஒளி மாணிக்கமே.
உரை: இளம்பிறை சூடிய சடையையுடைய தலைவனே, திருவொற்றியூரில் விளங்குகின்ற மாணிக்க மணியே, செல்வமே, நின்னுடைய பொன்னிறம் கொண்ட திருவடியைப் போற்றாமல் என் மனம், நிறைந்த காம மயக்கமுற்றுத் தீமை செய்கிறதே; இதற்கு யான் செய்வது யாது? நின்னைத் தொழாதவர்க்கு விதிக்கும் தண்டனையை விதியாகிய தெய்வம் எனக்கும் விதித்திருக்கிறதே! எ.று.
இளமதி - பிறைச்சந்திரன். சிவவொளி பரப்பும் பெருமானாதலின், “ஒளி மாணிக்கமே” என்கின்றார். திருவருளாகிய நிதியை வழங்கும் நீர்மையன் என்றற்கு, “நிதியே” எனப் புகல்கின்றார். நிதியுடையவனை நிதியென்பதுபோல, நின் திருவடியை ஏத்தி வழிபடுவதற்குரிய என் நெஞ்சம் அது செய்வதின்றிக் காமவேட்கை நிறைந்து அதற்குரிய செயல்களையே நினைந்து ஒழுகுகின்றதென்பார், “நிறை மயலாம் சதியே புரிகின்றது” எனவுரைக்கின்றார். சதி - தீமை. மனத்தை நெறிப்படுத்த மாட்டாமை புலப்பட, “என்னை செய்கேன்” என இரங்குகின்றார். தமது நெஞ்சம் இவ்வாறு தீ நெறிக்கண் செல்லுதற்குக் காரணம் யாதாகலாம் என ஆராய்பவர், வேறொன்றும் தோன்றாமையின், விதியின் செயலோ எனத் துணிகின்றவர், “அவ்விதி” யென எடுத்தோதி, இறைவன் திருவடியை நினையாதார் எய்தற்குரியது இத்தீச்செயல்; இது தனக்கெய்துதற்குக் காரணம் அவ்விதியின் செயலாம் என்பார், “உனைத் தாழலர் தம் விதியே எனக்கும் விதித்ததன்றோ அவ்விதியும்” என விளம்புகின்றார். அவ் விதி - உலகறி சுட்டு.
இதனால், தன் மனம் அடங்காது காமநெறியிற் சென்றது விதி வசம் எனச் சொல்லி வருந்தியவாறாம். (6)
|