1250. வாழாத நெஞ்சம் எனைஅலைத் தோடி மடந்தையர்பால்
வீழாத நாளில்லை என்னைசெய் கேன்உன் விரைமலர்த்தாள்
தாழாத குற்றம் பொறுத்தடி யேன்தனைத் தாங்கிக்கொள்வாய்
சூழா தவரிடம் சூழாத ஒற்றிச் சுடர்க்குன்றமே.
உரை: நிையைாதவர்பால் சேர்தல் இல்லாத திருவொற்றியூரில் எழுந்தருளும் ஒளிமலை போல்பவனே, நன்னெறியில் வாழாது அலையும் எனது நெஞ்சம், என்னைத் துன்புறுத்திச் சென்று மகளிரை யடைந்து தோயாத நாள் ஒருநாளுமில்லை; யானும் செய்வதறியேன்; மணம் பொருந்திய மலர்போன்ற நின் திருவடியை நினைந்து வணங்காத என் குற்றத்தைப் பொறுத்தருளி, மேலும் என் மனம் கெடாதவாறு என்னைத் தாங்கியருள்க. எ.று.
இறைவனை நினையாதாருள்ளத்தில் அவன் திருவடி இடம் பெறுதல் இல்லையாதலின், “சூழாதவரிடம் சூழாத ஒற்றிச் சுடர்க் குன்றமே” என்று கூறுகின்றார். நினையாத உள்ளத்தில் பொய்யும் இருளும் புகுந்து கொள்ளுதலின், அவன் இருப்பு அறியப்படாமையின், “சூழாத ஒற்றிச் சுடர்க்குன்றமே” என்கின்றார். “பொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி” (கயிலை) என்று நாவரசர் கூறுதற்கும் இதுவே கருத்தென உணர்க. “சுடரில் திகழ்கின்ற சோதி” (கயிலை) எனப் பாராட்டுதலுண்மையின், “சுடர்க்குன்றமே” எனத் துதிக்கின்றார். சிவனது திருவருளை நினைந்து வாழ்வது வாழ்வாகவும், அதனை மறந்து மங்கையர் இன்ப நுகர்ச்சியே வாழ்வாக எண்ணுவதுபற்றி மனத்தை “வாழாத நெஞ்சம்” என்கின்றார். காம வேட்கை வயப்பட்டு அதற்குரிய நினைவு செயல்களால் அலைப்புண்டமை வெளிப்பட, “நெஞ்சம் எனை அலைத்தோடி வீழாத நாளில்லை” என விளம்புகின்றார். “என்னை செய்கேன்” என்பது மனத்தை அடக்க மாட்டாமை யுணர நின்றது. மகளிர் கூட்டத்தால் இறை வழிபாட்டில் வழுவிய குற்றம் புலப்படுதலின், அது காரணமாகத் தமக்கு மனத்தை யடக்கும் வன்மை இலதாயிற்றுப் போலும் என அஞ்சுகின்றாராதலின், “விரை மலர்த்தாள் தாழாத குற்றம் பொறுத்து அடியேன் தனைத் தாங்கிக் கொள்வாய்” என விண்ணப்பிக்கின்றார். விரை மலர்த்தாள் தாழாமை நினைவு, மலரிட்டுத் தாம் வணங்க வேண்டிய கடமையில் நெகிழ்ந்தமை புலப்படுத்துமாறு அறிக.
இதனால், மனம் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டதால் கடமை நெகிழ்ந்தமைக்கு வருந்தியவாறாம். (8)
|