1252.

     துணையாம்உன் பொன்னடி ஏத்தா மனமது தோகையர்கண்
     கணையால் இளைக்கின்ற தென்னைசெய் கேன்என்றன் கண்இரண்டின்
     இணையாம் பரஞ்சுட ரேஅழி யாநல மேஇன்பமே
     பணையார் திருவொற்றி யூர்அர சேஎம் பரம்பொருளே.

உரை:

      என் கண்கள் இரண்டிற்கும் இணையாக விளக்கம் தரும் மேலான சுடரொளியே, அழிதலில்லாத நலமே, நலம்பயக்கும் இன்பமே, நன்செய் வயல்கள் நிறைந்த திருவொற்றியூர் அருளரசே, எமது பரம்பொருளே, இரண்டாகிய நின்னுடைய அழகிய திருவடிகளை வழிபடாத மனமானது மகளிருடைய கண்களாகிய அம்புகளால் புண்பட்டு மெலிந்து அவர்பால் ஓடுகின்றமைக்கு யான் யாது செய்ய வல்லேன்? எ.று.

     பணை - நன்செய் வயல்கள். திருவொற்றியூரிற் கோயில் கொண்டு அருளாட்சி புரிதல்பற்றி “ஒற்றியூர் அரசே” என்கிறார். இம்மையில் பெறற்குரிய அறம்பொருள் இன்பங்களாகிய உறுதிப் பொருள் எல்லாவற்றிற்கும் மேலாய பொருளாதலின் சிவத்தைப் “பரம்பொருள்” என்று பராவுகிறார். கண் இரண்டினும் நிலவும் அறிவொளிக்கும் மேலாய பரவொளியாகலின், சிவ ஒளியைக் “கண்ணிரண்டின் இணையாம் பரஞ்சுடர்” எனவும், உலகில் காணப்படும் நலங்கள் எல்லாவற்றினும் மேலாய் என்றும் உள்ளதாதலின், “அழியா நலமே இன்பமே” என்றும் போற்றுகின்றார். போற்றிப் பரவுதற்குரிய திருவடிகளை நினைந்து பரவாதொழிந்த குற்றத்தால், “துணையாம் உன் பொன்னடி ஏத்தா மனம்” என மனத்தின் வன்மையை எடுத்துரைத்து, மகளிர் கண்களின் காமப் பார்வையால் மென்மையுற்று இளைக்கின்றதை எடுத்தோதி ஏசுகின்றவர், “மனமது தோகையர் கண்கணையால் இளைக்கின்றது” என இகழ்கின்றார். இவ்வாறு இளைப்பது தீதென எடுத்துரைத்தும் கேளாமை புலப்பட, “என்னை செய்கேன்” என இசைக்கின்றார்.

     இதனால், மகளிர் கட்பார்வைக்குக் கலங்கி மெலியும் மனத்தின் புன்மைக் கிரங்கியவாறாம்.

     (10)