63. எண்ணத் திரங்கல்
திருவொற்றியூர்
அஃதாவது
நோய் மிக்குற்று எளிதில் தீராது அலைத்த போது மனத்தின்கண் இரங்கி எண்ணியவற்றை
எடுத்துரைப்பதாம். இப்பகுதிக் கண், தமக்கு வந்த நோய்க்குக் காரணமாயவற்றை எண்ணுகின்ற
வள்ளற் பெருமான், காம வேட்கையின் கடுமையும், முன்னை வினை வந்துருத்துதலும், மலவிருளின்
மறைப்பும் காரணமாகக் கருதுகின்றார். இந்நோயை மணி, மந்திர, மருந்துகள் தீர்க்க மாட்டா
தொழிவதும், இதனால் சிந்தனை சுருங்குவதும், வாய் வன்மை மருந்தாகாமையும், பிறவும் எடுத்தோதி,
இவை யெல்லாவற்றுக்கும் மேலாய் இறைவனே திருவுள்ளம் கொண்டு நீக்கினாலன்றி நோய் நீங்குதற்கு
ஒரு வாயிலுமில்லை யெனத் துணிகின்றமை அறிகின்றோம்.
கொச்சகக் கலிப்பா 1254. எளியேன்நின் திருமுன்பே என்உரைக்கேன் பொல்லாத
களியேன் கொடுங்காமக் கன்மனத்தேன் நன்மையிலா
வெளியேன் வெறியேன்தன் மெய்ப்பிணியை ஒற்றியில்வாழ்
அளியோய்நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
உரை: திருவொற்றியூரில் எழுந்தருளும் அருளுடையோனே, எளியவனாகிய யான் நின்னுடைய திருமுன்பு நின்று என்ன சொல்லப் போகின்றேன்; பொல்லாங்குடைய செருக்கும், கொடிய காம வுணர்ச்சி நிறைந்த கன்மனமும், நன்மை சிறிதுமில்லாத வெளிற்றுத் தன்மையும், வெறிச் செயலுமுடைய எனது உடம்பில் உண்டாகிய பிணியை நீ போக்காயாயின் வேறே எவர்தாம் நீக்க வல்லாராவர்? எ.று.
மிக்க அருளே திருவுருவாகியவனாதலால், “அளியோய்” என்கின்றார். திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் திருமுன்பு சென்று நின்றதும் தாம் எய்தி வருந்தும் நோய்கட்குக் காரணமான குணங்களும் செயல்களும் மனத்தின்கண் எழுதலால் அவற்றையும், பெருமான் பெருமையையும் தமது சிறுமையையும் நினைக்கின்றமையின், “எளியேன் நின் முன்பே என்னுரைக்கேன்” என மொழிகின்றார். “இளமை வளமைகளால் உண்டாகிய செருக்கும் அதனால் நல்லவர் நலங் காணாத மறைப்பும் முற்படலால், “பொல்லாக் களியேன்” என்றும், மிக்க காமம் விளைவிக்கும் மிடலால் மனம் கல்லினும் இறுகி வலிதாயிருத்தல் விளங்க, “கொடுங் காமக் கன்மனத்தேன்” என்றும், நலம் சிறிதும் தெரியாவிடினும் தெரிந்தாற் போலப் பேசும் வெளிற்றறிவும் பயனில்லாத சொல்லும் செயலும் உடைமை தெரிவதால், “நன்மையிலா வெளியேன் வெறியேன்” என்றும், இக் குற்றச் செய்கைகளால் உடலின்கண் தோன்றி வருத்தும் நோயை எடுத்தோதி, “மெய்ப்பிணியை” என்றும், என்பால் குற்றங்களைப் பொறுத்தருளி மெய்ந்நோயை நீக்கி யருளுவது எல்லாம் வல்ல நின்னாலன்றிப் பிறரால் இல்லை என்பாராய், “நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே” என்றும் உரைக்கின்றார். களி - ஈண்டுச் செருக்கு. வெளியன் - யானே ஒள்ளியன் எனக் கருதிப் பேசும் வெள்ளை யறிவுடையவன். “வெண்மை யெனப் படுவதியா தெனின் ஒண்மை யுடையம் யாம் என்னும் செருக்கு” (குறள்) என்பர். வெறுமை - நலம் இன்மை.
இதனால், தமது மெய்ந் நோய்க்குக் காரணமாய குற்றங்களை உள்ளத்தே யெண்ணி யெடுத்தோதி நீக்கி யருள வேண்டியவாறாம். (1)
|