1256.

     இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை
     வெப்பார் உளத்தினர்போல் வெம்மைசெயும் வெம்பிணியை
     எப்பா லவர்க்கும் இறைவனாம் என்அருமை
     அப்பா நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.

உரை:

      எந்நிலத்து எத்திறத்தோர்க்கும் இறைவனாய் அருள் புரியும் அப்பனே, இவ்வுலகில் உன்னையே நினைந்து போற்றுகின்ற நாயனைய என்னைக் கொடுமையுடைய மனத்தினரை வருத்துவது போல வெய்துறுத்து வருத்தும் வெவ்விய நோயை நீ நீக்கியருளாயாயின், வேறு யாவரே நீக்க வல்லவர்? எ.று.

     எல்லா வுலகங்களிலும் வாழும் உயிர்த்தொகை அனைத்தும் அடங்க, “எப்பாலவர்க்கும்” என உரைக்கின்றார். எல்லா வுயிர்க்கும் இறைபுரிவது பற்றி, சிவனை “இறைவனாம் என் அருமை அப்பா” என இயம்புகின்றார். இறைவனாயினும் தனக்கும் அவர்க்குமுள்ள உறவு புலப்பட, “அருமை அப்பா” என்கின்றார். பார் - மண்ணுலகம். தான் இருந்து வாழ்வதாகலின், இப்“பார்” எனக் காட்டுகின்றார். உனையே என்ற விடத்து ஏகாரம். பிற தெய்வங்களை விளக்குதலால், பிரிநிலை. வெம்மை, வெப்பு என வந்தது; ஈண்டு கொடுமை மேற்று. கொடுமையுடையவரை அவரது கொடுமை வருத்துவதுபோல் என்னை யுற்ற பிணியும் வெம்மையுற்று வருத்துகிற தென்பாராய், “வெம்மை செயும் வெம்பிணி” என்றும் இதனையே நீயே நீக்கியருள்க என்பார், “நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே” என்றும் இசைக்கின்றார்.

     இதனால், தமக்குற்ற நோய் கொடியவர்க் கெய்துவது போன்ற கொடுமையுடன் வருத்துகிற தென முறையிட்டவாறாம்.

     (3)