1257. ஓவா மயல்செய் உலகநடைக் குள்துயரம்
மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய்ந்நோயைச்
சேவார் கொடிஎம் சிவனே சிவனேயோ
ஆவாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
உரை: எருதெழுதிய கொடியை யுடைய எங்கள் சிவபெருமானே, நீங்காத மயக்கத்தை நல்கும் உலக நடைக்குள் புதைந்து துயரத்தில் ஆழ்ந்து வருந்துகின்ற புல்லறிவினனாகிய யான் எய்தி வருந்தும் உடல் நோயை, ஆஆ, நீக்க வல்லவர் நின்னையொழிய யாவருளர்! எ.று.
சிவபெருமானுக்கு எருதுதான் ஊர்தியாவதன்றி, அவரது கொடியிலும் அதுவே எழுதப்பட்டிருக்கு மாதலால், “சேவார் கொடியெம் சிவனே” என வுரைக்கின்றார். “விடைபுல்கு கொடி யேந்தி வெந்த வெண்ணீ றணிவான்” (பருப்ப) என ஞானசம்பந்தர் புகழ்வது காண்க. இறைவன் படைத்தளித்த உலகியலில் நன்கு அழுந்தி வாழ்வாங்கு வாழ்ந்தாலன்றி உயிர்கள் உய்தி பெறலாகாமையின், உலகியலை யழுந்தி யறிதற் பொருட்டு உயிரறிவு மயக்கப்படுவது விளங்க, “ஓவா மயல்செய் உலக நடை” என்றும், மயங்கும் உயிர் தெளிவு பெறாது உலகியல் வாழ்வே உறுதியென நினைந்து அதற்குள் மூழ்கி மிக்குறும் துன்பத்தில் வருந்துவது தோன்ற, “உலக நடைக்குள் துயரம் மேவா வுழல்கின்ற வெண்மையேன்” என்றும் இயம்புகின்றார். வெண்மை - திண்ணிய அறிவில்லாமை. உலகியல் அறிவால் வளரும் உயிர் போலாது பருப் பொருளால் வளருதலின் உடல் பல்வகை நோய்க்கிரையாதல் பற்றி “மெய்ந்நோய்” என விளம்புகிறார்.
இதனால், மெய்ந் நோய்க் காரணம் எண்ணியவாறாம். (4)
|