1259. இம்மா நிலத்தில் இடருழத்தல் போதாதே
விம்மா அழுங்கஎன்றன் மெய்உடற்றும் வெம்பிணியைச்
செம்மான் மழுக்கரங்கொள் செல்வச் சிவமேஎன்
அம்மாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
உரை: சிவந்த மானையும் மழுவையும் கைகளில் ஏந்துகிற செல்வச் சிவபிரானே, என் தலைவனே, இப் பெரிய மண்ணுலகிலிருந்து துன்புறுவ தோடமையாமல் விம்மி வருந்துமாறு என்னுடலைப் பற்றி வருத்துகின்ற கொடிய நோயை நீ நீக்கியருளாயாயின், வேறு யாவர் வல்லவராம்? எ.று.
சிவந்த நிறமுடைமைபற்றி மானைச் “செம்மான்” என்கிறார். அருட்செல்வராதலின் “செல்வச் சிவமே” எனச் சிறப்பிக்கின்றார். மண்ணுலக வாழ்வே வருவது உணர விடாது மயக்கி உயிரைப் பல இன்னல்கட்கு உள்ளாக்குதலின், “இம்மாநிலத்தில் இடருழத்தல் போதாதே” என்று உரைக்கின்றார். போதுதல் - அமைதல், அறியாமையால் ஆருயிர்க்கு உளதாகும் அவலத்தினும் அரிய உடற்கு நோயால் உளதாகும் அவலம் அடக்க அரிதாய் விம்மி வாய்விட்டலறச் செய்தலின் “விம்மா அழுங்க என்றன் மெய்யுடற்றும் வெம்பிணி” என விளம்புகின்றார். அம்மான் - தலைவன்.
இதனால், உடற்பிணியால் உளதாகும் வருத்த மிகுதியை எடுத்துரைத்தவாறு. (6)
|