1260.

     புரைசேரும் நெஞ்சப் புலையனேன் வன்காமத்
     தரைசேரும் துன்பத் தடங்கடலேன் வெம்பிணியை
     விரைசேரும் கொன்றை விரிசடையாய் விண்ணவர்தம்
     அரைசேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.

உரை:

      மணங்கமழும் கொன்றை மலர் அணிந்த விரிந்த சடையை யுடையவனே, மேலுலகத் தேவர்கட் கரசனே, குற்றம் பொருந்திய நெஞ்சினாற் புலைத்தன்மையுற்ற யான், வன்மையுடைய காம வேட்கையால் மண்ணுலகத்தில் எய்தும் துன்பமாகிய பெரிய கடலிடைப்பட்டு வருந்துகிற வெம்மையையுடைய நோயை நீக்காயாயின், நீக்க வல்லவர் வேறே யாவர்? எ.று.

      மணமில்லாத எருக்கு முதலியவற்றைச் சூடுகின்ற பெருமானாயினும், மணமிக்க கொன்றை அடையாளப் பூவாதலின், அதனை, “விரைசேரும் கொன்றை விரிசடையாய்” என்கின்றார். மார்பில் மாலையாதலோடு விரிசடையிலும் கண்ணியாய்க் கிடத்தலின், “கொன்றை விரிசடையாய்” என இயைக்கின்றார். மண்ணவர்க்கு இறைவனாகின்ற பெருமான் தேவர்கட்கு அரசனாகவுமிருந்து முறை செய்வது தோன்ற, “விண்ணவர் தம் அரைசே” என்றியம்புகின்றார். புரை - குற்றம். தீய நினைவுகளே செறிதல் பற்றிப் “புரை சேரும் நெஞ்சப் புலையனேன்” எனவும், அதனால் மண்ணிற் பிறந்திறந்து உழலுவதே செயலாகக் கொண்டு வருந்துவது தோன்ற, “வன்காமத் தரை சேரும் துன்பத் தடங்கடலேன்” எனவும் இயம்புகின்றார். பெண் காமமேயன்றிப் பொருட்காமமும் மீதூர்ந்து தீராப் பிறப்பிறப்புத் துன்பங்கட் கேதுவாதலின், “வன்காமத் துன்பத் தடங்கடலேன்” என்கின்றார். இவ்வாறு தோன்றிய உயிர்ப் பிணிகளோடு அரிய மருந்துகளால் எளிதில் நீங்காது வருத்தும் உடற்பிணியை “வெம்பிணி” என விதந்துரைக்கின்றார். இதனால் பயன், இறைவனல்லது பிறராற் நீக்கலாகாது என்பது வற்புறுத்துவதாம்.

     இதனால், உடலில் உற்ற வெம்பிணியை விதந்தோதியவாறு.

     (7)