1266. அருந்தி னால்அன்ப கங்குளிர் ஆனந்த
விருந்தி னால்மகிழ் வித்தருள் அண்ணலே
வருந்தி நாடவ ரும்பிணி நின்அருள்
மருந்தி னால்அன்றி மற்றொன்றில் தீருமோ.
உரை: நின்பால் அன்புடைய அடியார்களை மனம்குளிர உண்பிப்பதனாலும், இன்ப விருந்து செய்து மகிழ்விப்பதனாலும், பேரருள் புரியும் பெருமானே, மருந்து பெறலாகாமையால் வருந்தி, மேலும் தேட வொண்ணாததாயுள்ள நோயை நின் திருவருளாகிய நன்மருந்தாலன்றி வேறு உலகியல் மருந்துகளால் நீக்க முடியாதாம். எ.று.
அன்பு, ஆகுபெயராய் அன்புடைய அடியார்க் காயிற்று. பசித்துவரும் மெய்யன்புடைய அடியார்க்கு அவர் வயிறும் மனமும் குளிரும்படி உணவளிப்பதும், இனிய அரிய பொருள்களைக் கொண்டு இன்ப விருந்து செய்வதும் சிவபரம்பொருட்கே செய்யப்படும் மேன்மையும், திருவருட் செல்வத்தை நல்கும் வாய்மையும் உடையவாதலின், “அன்பகம் குளிர் அருந்தினால்” எனவும், “ஆனந்த விருந்தினால் மகிழ்வித்தருள் அண்ணலே” எனவும் இசைக்கின்றார். அருந்தினால், அருந்துவதைச் செய்வித்தலால் எனப் பொருள்படும். மகிழ்வித்தருள், மகிழ்வித்தலால் அருளும் என வரும். செய்த னெச்சம் காரணப் பொருளதாம். மிக முயன்று தேடியும் பெறற்கரிய மருந்து வேண்டும் நோயை “வருந்தி நாடவரும் பிணி” என்று கூறுகின்றார். இத்தகைய நோய்க்கு மருந்து திருவருளல்லது பிறிது யாதும் இல்லை யென்றற்கு “நின்னருள் மருந்தினாலன்றி மற்றொன்றில் தீருமோ” என வுரைக்கின்றார். இனி, மெய் வருந்தியும் பலபட எண்ணியும் நிண்ணை யடைதற்கு எய்தும் இப்பிறவி நோய், திருவருளாகிய மருந்தாலன்றி, உலகில் வயிறார வுண்பதனாலும், அன்பருடன் மனம் குளிர ஆனந்த விருந்துண்பதனாலும் பிறரை உண்பித்தலாலும் வேறு பிறவற்றாலும் தீருவதன்று என உரைப்பாருமுண்டு; நல்லது கொள்க.
இதனால், புள்ளிருக்குவேளூர் அண்ணல் வழங்கும் திருவருளல்லது வேறு யாதும் நோய்க்கு மருந்தாவதில்லை யென வற்புறுத்தவாறாம். (3)
|