1267. மாலும் நான்குவ தனனும் மாமறை
நாலும் நாடரு நம்பர னேஎவ
ராலும் நீக்கஅ ரிதிவ்வ ருத்தம்நின்
ஏலும் நல்லருள் இன்றெனில் சற்றுமே.
உரை: திருமாலும் நான்முகனும் மறைநான்கும் தேடி யறிதற்கரிய எங்கள் பரமசிவனே, யான் எய்திய வருத்தம், எவ்வுலகும் ஏற்கின்ற நின்னுடைய திருவருளில்லையாயின், எத்தகையோராலும் சிறிதும் நீக்கப்படுவதன்று, காண். எ.று.
வதனம் - முகம். நான்கு வதனன் - நான்கு முகங்களையுடைய பிரமன். பிரமனே யன்றி அவனைப்போல் நாடோறும் மறைகளையோதும் தேவவேதிய ருண்மையின் அவர்களாலும் ஆராய்ந்தறிய மாட்டாமை தோன்ற, “மாமறை நாலும் நாடரும் நம்பரனே” என்று கூறுகின்றார். வேதங்கள், நூலளவில் அறிவில் பொருளாதலால், வேதம் ஓதுகிறது என்பது வேதம் வல்லார் ஓதுகின்றனர் என்ற பொருளைக் கொண்டது. பிறவியால் துன்பமே மிகுவது பற்றிப் பெரியோர் அதனை நோய் எனவும் பிணியெனவும் கூறுவர்; அதனை நமது வள்ளற் பெருமான் “இவ்வருத்தம்” எனச் சுட்டுகின்றார். அருள் - திருவருட் சிவஞானம். பெரியது நல்லது இனியது என அறிஞரனைவரும் ஏற்பது பற்றி, திருவருளை, “ஏலும் நல்லருள்” என இசைக்கின்றார். பிறந்திறக்கும் பிற தெய்வங்களைப் போலாது பிறவா வாழ்வாற் பிறங்குபவனாதலால், அவனே பிறவி நோயை நீக்குபவன் என்றற்கு, அவனது “நல்லருள் இன்றெனில் இவ்வருத்தம் எவராலும் நீக்கரிது” என மொழிகின்றார். “பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க” (சிவபு) என்பது சிவபுராணம்.
இதனால், பிறவி நோய் போக்கற்குப் புள்ளிருக்குவேளுர்ப் பெருமான் திருவருள் இன்றியமையாதது என்பது வற்புறுத்தவாறாம். (4)
|