1268. தேவர் ஆயினும் தேவர்வ ணங்கும்ஓர்
மூவர் ஆயினும் முக்கண நின்அருள்
மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
ஓவு றாதஉ டற்பிணி தன்னையே.
உரை: முக்கட் பெருமானே, நீங்காது நின்று வருத்தும் எனது உடம்பின் நோயைத் தேவர்களே யாயினும் அவர்களால் வணங்கப்படும் மூவர்களே யாயினும் நின் திருவருள் துணையைப் பெறாமல் நீக்கும் பான்மையராவரோ? எ.று.
நெற்றியிற் பொருந்திய கண்ணுடன் கண்கள் மூன்றுடையவனாதலால், “முக்கண” என மொழிகின்றார். முக்கண, அண்மை விளி. புள்ளிருக்கு வேளூர்ப் பெருமான், திரு முன்னின்று பாடுதல் தோன்ற, அண்மை விளி தொடுக்கின்றார். மக்களின் மேம்பட்ட பிறப்பும், மக்கட்கும் வரம் தரும் சிறப்பும் உடைமை பற்றித் “தேவராயினும்” எனச் சிறந்தெடுத்துக் கூறாகின்றார். தேவவுடம்பொடு சென்று நேரிற் கண்டு வணங்கிப் பரவும் நற்பேறுடையராதலின், பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவர்களை வணங்கும் திறத்தைத், “தேவர் வணங்கும் ஓர் மூவராயினும்” என இயம்புகிறார். பிரமன் முதலிய மூவரும் முறையே உலகங்களைப் படைத்தளித்து அழிக்கும் திறனும் தொழிலும் உடையவர் என்ப; ஆயினும் அவர்கள் தமக்கு முதல்வனான சிவபரம்பொருளின் அருளாணை வழி நின்று தமக்குரிய தொழிலைச் செய்வதன்றி, தாமே தனியாணை செலுத்தும் தனித்தலைமையுடையவரன்மையின், “மூவராயினும் விலக்கிடற் பாலரோ” என விளம்புகிறார். உயிரை உடம்பொடு பிணித்து இன்பமும் துன்பமும் நுகர்விக்கும் தனிமுதன்மை சிவனதாகலின், “நின்னருள் மேவுறாது விலக்கிடற் பாலரோ?” என்று மொழிகின்றார். உடம்பொடு கூடியிருக்கும் அதற்கு விளைகின்ற பிணியும் நோயும் கடலலை போல் உயிரைத் தாக்கிய வண்ணமிருத்தலின், “ஓவுறாத வுடற்பிணி” என்று உரைக்கின்றார். ஓவுதல் - நீங்குதல். உடம்பின் கூறுகளாகிய வாத முதலிய மூன்றும் மிகினும் குறையினும் நோய் செய்தலின், “ஓவுறாத உடற்பிணி” என்கின்றார் எனினுமாம். “மிகினும் குறையினும் நோய் செய்யும் மேலோர் வளி முதலா எண்ணிய மூன்று” (குறள். 941) எனத் திருவள்ளுவர் தெரிவிப்பது காண்க.
இதனால், தேவரும் தேவ தேவர்களும் மக்கட் கெய்தும் நோய் நீக்கும் ஆற்றலுடைய ரல்லர் என்று விளம்பியவாறாம். (5)
|