1269. வைய நாயக வானவர் நாயக
தையல் நாயகி சார்ந்திடும் நாயக
உய்ய நின்னருள் ஒன்றுவ தில்லையேல்
வெய்ய நோய்கள்வி லகுவ தில்லையே.
உரை: மண்ணவர்க்கும் விண்ணுலகத் தேவர்க்கும் தையல் நாயகியாகிய உமையம்மைக்கும் நாயகனே, நினது திருவருள் பொருந்துவதில்லையாயின் உயிர்கள் உய்தி பெறுதற்குத் தடையாக நின்று வருத்தும் கொடிய நோய்கள் நீங்குவதில்லை, காண் எ.று.
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தார் பெறுவதாகலின் வைய வாழ்வினை, வானக வாழ்க்கைக் கேதுவாகக் கருதி முதற்கண் மொழிகின்றார். புள்ளிருக்கு வேளூர்க்கண் கோயில் கொண்டருளும் அம்பிகையை ஞானசம்பந்தர், “தையலாள் ஒருபாகம்” என உரைத்தலால், “தையல் நாயகி” என்பது அங்கு அவட்குத் திருப் பெயராயிற்று. உயிரை உடலொடு பிணித்து உலகில் வாழ்வாங்கு வாழச் செய்தது திருவருளாதலின், வாழ்விற்கு இடையூறு செய்யும் பிணி முதலியவற்றை நீக்கற்குத் திருவருள் துணையன்றி வேறில்லை யென்பதை யாப்புறுத்தற்கு “உய்ய” என்றும், “நின்னருள் ஒன்றுவதில்லையேல் வெய்ய நோய்கள் விலகுவதில்லையே” என்றும் உரைக்கின்றார்.
இதனால், திருவருளால் அன்றி உடற்குளவாகும் எத்தகைய நோயும் நீங்குமாறில்லையென விளக்கியவாறாம். (6)
|