1270. கல்லை வில்லில்க ணித்தருள் செய்ததோர்
எல்லை இன்றிஎ ழும்இன்ப வெள்ளமே
இல்லை இல்லைநின் இன்னருள் இல்லையேல்
தொல்லை நோயின்தொ டக்கது நீங்கலே.
உரை: மேரு மலையை வில்லாக வளைத்த, எல்லையின்றிப் பெருகும் இன்பப் பெருக்கமே, பழமைதொட்டு வருத்தும் நோயின் பிணிப்பு நினது திருவருள் இல்லையாயின் நீக்குவது இல்லை; முக்காலும் இல்லை. எ.று.
கல் என்றது, மேரு மலையை, மலை வில்லாதல் வேண்டுமென எண்ணி வளைத்தமை தோன்ற, “கல்லை வில்லில் கணித்தருள்” என்கின்றார். சங்கற்பம், கரணம் என்ற இருவகைப் படைப்புக்களுள், யாவற்றையும் சங்கற்பத்தால் செய்பவன் சிவன் என, சைவ நூல்கள் கூறுதலின், “கணித்த” என்று கூறுகின்றார். வரம்பிலின்ப உருவினனாதலால் “எல்லையின்றி யெழும் இன்ப வெள்ளமே” எனச் சிறப்பிக்கின்றார். உடம்பின் தொடர்பு உண்டாகிய ஞான்றே நோயும் உடன் தோன்றியதால் “தொல்லை நோய்” என்று குறிப்பிடுகின்றார். நோய் இத்துணைப் பழமைமைத் தாயினும் திருவருள்முன் நில்லாது கெட்டொழியும் என்பார், “நின்னருள் இல்லையேல் நீங்கல் இல்லை யில்லை” என்கின்றார்.
இதனால், பிணியின்றி வாழ்விப்பது இறைவன் திருவருள் துணை என்பது தெரிவித்தவாறு. (7)
|