1272. பத்தர் நித்தம்ப யில்பரி திப்புரி
உத்த மப்பொரு ளேஉன்அ ருள்தனைப்
பெத்தம் அற்றிடப் பெற்றவர்க் கல்லது
நித்தம் உற்றநெ டும்பிணி நீங்குமோ.
உரை: மெய்யன்பர்கள் நாளும் பணிந்து வழிபடும் பரிதிபுரியில் எழுந்தருளும் உத்தமப் பொருளே, பெத்த நிலையாகிய பிறவி வாழ்வு ஒழிதற்குரிய நின் திருவருளை யெய்தியவர்க்கன்றி நாடோறும் வந்து வருத்தும் நெடிய பெரிய நோய்கள் நீங்கா காண். எ.று.
மெய்யன்பர்கள் நாடோறும் வழிபடுகின்ற பெருமையுடையதாதல் பற்றிப் புள்ளிருக்கு வேளூரை, “பத்தர் நித்தம் பயில் பரிதிபுரி” என்கின்றார். பரிதிபுரி எனற்பாலது இசை நிறைத்தற் பொருட்டுப் “பரிதிப்புரி“ என வந்தது. தத்துவாதீதப் பரம்பொருள் என்றற்குச் சிவனை, “உத்தமப் பொருளே” என்கின்றார். பெத்தம் என்பது பிறந்திறந்துழலும் உலகியல் வாழ்வு. இதைப் பந்த வாழ்வு என்றும் கூறுவதுண்டு. “தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும் பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல்” (ஆடூர்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. உலகியல் வாழ்க்கைத் தொடர்பு நீங்காதவர்க்கு மனநோயும் உடல்நோயும் ஈண்டுதலால் திருவருள் தொடர்பு இன்றியமையாதென்றற்கு, “பெத்தம் அற்றிட உன் அருள்தனைப் பெற்றவர்க்கல்லது நித்தம் உற்ற நெடும்பிணி நீங்குமோ” என்கின்றார், ஓகாரம், எதிர்மறை.
இதனால், பெத்த நிலையின் நீங்கி உய்தற்குத் திருவருள் இன்றியமையாமை வற்புறுத்தியவாறாம். (9)
|