1273. சைவ சிற்குணர் தம்முளம் மன்னிய
தெய்வ தற்பர னேசிவ னேஇங்கு
உய்வ தற்குன்அ ருள்ஒன்றும் இல்லையேல்
நைவ தற்குந ணுகுவ நோய்களே.
உரை: சைவ ஞான குணஞ் செயலுடையவர் உள்ளத்தில் நிலையுறுகின்ற தெய்வமே, தற்பரனே, சிவனே, இவ்வுலகில் இப்பிறப்பில் உய்தி பெறுதற்கு நின் திருவருள் இல்லையாயின், நோய்கள் நைந்து கெடுக்கும் பொருட்டு வந்தடையும். எ.று.
சிவஞானச் செந்நெறிக்கண் நின்று அதற்குரிய குணஞ் செயல்களை யுடைய பெருமக்கள் உள்ளத்தில் நிலைபெற வீற்றிருக்கும் சிவமூர்த்தியை, “சைவ சிற்குணர் தம்முளம் மன்னிய சிவனே” எனவும், யாவராலும் வழங்கப்படும் திருமூர்த்தமாய்த் தற்பரம்பொருளாய்த் திகழ்ந்து வழிபடற் கமைவதாவது விளங்கத் “தெய்வ தற்பரனே” எனவும் இயம்புகின்றார். “சிந்தை செய்து சிவமூர்த்தியென்றெழுவார் சிந்தையுள்ளால் உற்றதோர் நோய் களைந்து இவ்வுலகமெல்லாம் காட்டுவான்” (கழிப்பா) என்று ஞானசம்பந்தர் நவில்வது காண்க. திருவருளாலன்றி நோயும் பிணியுமாகிய இடர்ப்பாடின்றி இனிது செந்நெறி நின்று உய்தி பெறுமாறில்லை என்பதுபற்றி, “இங்கு உய்வதற்கு உன்னருள் ஒன்றும் இல்லையேல்” என்றும், ஒளியில்வழி இருள் அடர்தல்போல அருளில்வழி நோய்கள் படர்ந்து உயிர் அறிவை மெலிவிக்கும் என்பார், “நைவதற்கு நணுகுவ நோய்களே” எனவும் நவில்கின்றார்.
இதனால், அருளில் வழி நோய்கள் தோன்றி உய்தி பெறாவாறு உயிரறிவைக் கெடுக்குமென உணர்த்தியவாறாம். (10)
|