65. நெஞ்சுறுத்த திருநேரிசை

திருவொற்றியூர்

    நெஞ்சினை நேர்மையுறுவித்த நேரிசை வெண்பாக்களால் ஆகியதாகலின் இப்பகுதி நெஞ்சுறுத்த திருநேரிசை என்று பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

    ஒரு நெறியானன்றிப் பல தலையாக ஓடுவது நெஞ்சம்; அது செல்லும் நெறி பலவற்றையும் தொகுத்தும் வகுத்தும் முறை செய்து காண்டற்கு இடம் வாயாமை காண்கின்றார் வடலூர் வள்ளற்பெருமான். ஒற்றியூர்ப் பரமனை இடையறாது எண்ணுதலும் அவனுடைய அடியார்களின் திருவடிகட் காட்செய்தலும், அப் பரமன் வீற்றிருக்கும் சிவத் தொண்டர் திருவுளத்தைப் போற்றிப் பரவுதலும், திருவைந்தெழுத்தை ஓதும் தவநெறியிற் கூடலும் இன்னோரன்ன பிறவும் ஆகிய கருத்துக்களை நெஞ்சிற்கு வற்புறுத்த அந்தாதித் தொடை வகையில் இருபத்தாறு வெண்பாக்களால் பாடியருளுகின்றார். இதன்கண், வாழ்த்து வகையில் முதல் இரண்டு பாட்டுக்கள் உள்ளன. எஞ்சிய இருபத்து நான்கும் நூலாக அமைகின்றன.

நேரிசை வெண்பா

1274.

     பொன்னார் விடைக்கொடிஎம் புண்ணியனைப் புங்கவனை
     ஒன்னார் புரம்எரித்த உத்தமனை - மன்னாய
     அத்தனைநம் ஒற்றியூர் அப்பனைஎல் லாம்வல்ல
     சித்தனைநீ வாழ்த்துதிநெஞ் சே.

உரை:

     நெஞ்சமே, அழகிய விடைக்கொடி ஏந்துகிற எம்புண்ணியப் பொருளாகியவனும், புங்கவனும், பகைவர் மதில் மூன்றையும் எரித்த உத்தமனும், எங்கட்கு நிலைத்த அத்தனும், திருவொற்றியூரில் உறையும் எங்கள் அப்பனும், எல்லாம் வல்ல சித்தனுமாகிய சிவபெருமானை நீ வாழ்த்துவாயாக. எ.று.

     எருது எழுதிய அழகிய கொடியை உயர்த்தியவனாதலின், சிவனைப் “பொன்னார் விடைக்கொடியெம் புண்ணியன்” என்று புகல்கின்றார். புண்ணியப் பயனாய் எழுந்தருள்பவனைப் புண்ணியன் என்று கூறுகின்றார். புங்கவன் - உயர்ந்தவன். திரிபுரத்தவர் தேவர்கட்குப் பகைவராதலால் “ஒன்னார்” எனப்படுகின்றனர். அசுரர் புரத்தை நகைத்தெரித்துச் சாம்பராக்கியது பற்றிப் “புரமெரித்த உத்தமன்” என்கின்றார். உலகருள் முதல்வனாதலால் சிவனை “அத்தன்” என்பவர், அனாதி நித்தனென்றற்கு “மன்னாய அத்தன்” என்று கூறுகின்றார். திருவொற்றியூரவர்க்கும் நாட்டவர்க்கும் முதல்வனாதலால் “ஒற்றியூர் அப்பன்” என மொழிகின்றார். மதுரையில் எல்லாம் வல்ல சித்தராய்த் தோன்றி வேந்தற்கருளினானாதலால் எல்லாம் வல்ல சித்தனென்றோதி அவன்பால் நல்ல வல்லமை பெறற்கு “வாழ்த்துதி” என அறிவுறுத்துகின்றார்.

     இதன்கண், எல்லாம் வல்ல சித்தனாகிய சிவனை வாழ்த்தி வாழ்க என்பதாம்.

     (1)