1275.

     நெஞ்சே உலக நெறிநின்று நீமயலால்
     அஞ்சேல்என் பின்வந் தருள்கண்டாய்--எஞ்சாத்
     தவக்கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்தேத்தும் ஒற்றிச்
     சிவக்கொழுந்தை வாழ்த்துதும்நாம் சென்று.

உரை:

      நெஞ்சமே, நீ இப் புவிநடையில் நின்று மயக்குற்று அஞ்ச வேண்டா; என் பின் வருக; குன்றாத தவமுடையராய நற்குணச் சான்றோர் வணங்கி வழிபடும் திருவொற்றியூர் சிவபெருமானை நாம் சென்று வாழ்த்துவோமாக. எ.று.

     உலகியல் வாழ்வு புவிநடை யென்றும், உலகநெறி யென்றும், உலக நடையென்றும் கூறப்படும். மலவிருளின் நீங்கற்குரிய ஆன்மாவுக்கு இவ்வுடம்பும் உலகும் மாயையினின்றும் படைத்தளிக்கப்பட்டுள்ளன; உடம்பொடு கூடி உலகில் வாழ்வதுதான் புவி நடை. இவ்வாழ்வால் ஆன்மா உய்திபெற வேண்டியது கடன். வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்ததாகலின், அறிவுடைய ஆன்மா வாழ்க்கை யனுபவம் பெறற் பொருட்டுப் புவிநடையால் மயக்கப்படும்; துன்ப நுகர்ச்சிக்காக ஆன்மவறிவு உலக நெறியில் மயங்கித் தவறு செய்து துன்புறும்; துன்புற்றபோது தெளிவுற்றுப் புவிநடையின் நீங்கி யோட முயலும்; இன்பம் எய்தும் போது உலகியல் மயக்கில் அழுந்தி உய்தி நாடா தொழியும். நெஞ்சும் உடம்பு தோன்றுதற்கு முதற் காரணமான மாயையினின்றே ஆக்கப்படுதலால், பலகாலும் புவிநடைக்கே அடிமையுற்று அதன் வழியே செல்லுவதாம். உலக வாழ்க்கைச் சூழலில் துன்புற்றோரளவு தெளிவுற்றிருக்கும் செவ்வி நோக்கி நெஞ்சோடு உரையாடுகின்றாராகலின், “நெஞ்சே உலக நெறி நின்று நீமயலால் அஞ்சேல்” என்றும், நெஞ்சு துணையாய வழி உலகியல் மயக்கு ஒழிதற்கு அறிவொளி விளங்குதலால் “என் பின் வந்தருள் கண்டாய்” என்றும் கூறுகின்றார். வந்தருள் என உயர்ந்தோர்க்குரிய உயர்சொற் கிளவியால் உரைத்தது நெஞ்சின் அருமை புலப்படுத்தற்கு என அறிக. தவத்தால் அருட்செல்வம் பெருக வுண்டாதலை யெண்ணி “எஞ்சாத் தவம்” என்றும், மேன்மேலும் பெருகுதல் குறித்துத் “தவக்கொழுந்து” என்றும், தவஞானப் பேற்றுக்குரிய குணஞ் செயலுடையார்களைச் “சற்குணவர்” என்றும் புகல்கின்றார். சிவபெருமான் திருவுருவம் இளமை நலம் பொலிந்து தோன்றலின், “சிவக்கொழுந்து” எனச் சிறப்பிக்கின்றார்.

     இதனால், சிவக்கொழுந்தை நாம் சென்று வாழ்த்துவோமாயின், உலகமயலின் நீங்கலாம் என்பதாம்.

     (2)