1277.

     வருநாள் உயிர்வாழும் மாண்பறியோம் நெஞ்சே
     ஒருநாளும் நீவேறொன் றுன்னேல் - திருநாளைப்
     போவான் தொழுமன்றில் புண்ணியனை ஒற்றியில்தாய்
     ஆவான் திருவடிஅல் லால்.

உரை:

      நாளை வரும் பொழுதில் நெஞ்சமே, நாம் உயிர் வாழப்போகிற திறம் அறிய மாட்டோம்; ஆகவே திருநாளைப் போவார் என்ற நாயனார் தொழுது போற்றிய அம்பலவாணனாகிய புண்ணியமூர்த்தியும், திருவொற்றியூரில் நமக்குத் தாயுமாகும் சிவபெருமான் திருவடியையன்றி வேறே ஒன்றை நீ நினைப்ப தொழிக. எ.று.

     முன்னே திகழ்ந்ததை மறப்பதும், பின்னே நடக்க விருப்பதை அறியாதவாறு மறைப்பதுமாகிய மலவிருள் நமது ஆன்ம வறிவொளியின் கண் மறைந்துளது; அதனால், வரவிருக்கும் அடுத்த பொழுதில் நமது உயிர் பெறவிருக்கும் அனுபவத்தை அறிய மாட்டாத நிலையில் நாம் உள்ளோம்; நமது அறிவின் சிறுமை அமைந்திருக்கும் திறம் இது காண் என்பாராய், “வருநாள் உயிர் வாழும் மாண்பு அறியோம் நெஞ்சே” என்று மொழிகின்றார். இத்தகைய குறைபாடுடைய நாம் பல நினைப்பது முறையன் றென்றற்கு “ஒருநாளும் நீ வேறு ஒன்று உன்னேல்” என உரைக்கின்றார். வேறு நினையாதே என்றவிடத்து நினைக்கத் தகுவது ஒன்று உண்டென்பது பெறப்படுதலின், அஃது யாதென்னும் அவாய் நிலைக்கு விடை கூறுலுற்றவர், “புண்ணியனும், தாயாவானும் ஆகிய சிவன் திருவடியல்லால் ஒருநாளும் நீ வேறொன் றுன்னேல்” என்று விளம்புகின்றார்.

     இதனால், ஒற்றியூர்ப் பெருமான் திருவடி யல்லது வேறு ஒன்றும் நினையாதே என்பதாம்.

     (4)