1278.

     அல்லாலம் உண்டமிடற் றாரமுதை அற்புதத்தைக்
     கல்லால நீழல்அமர் கற்பகத்தைச் - சொல்ஆர்ந்த
     விண்மணியை என்உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில்என்
     கண்மணியை நெஞ்சே கருது.

உரை:

      நெஞ்சமே, கரிய விடமுண்ட கழுத்தையுடைய அரியஅமுது போல்பவனும், அற்புதமானவனும், கல்லால மரநீழலில் வீற்றிருக்கும் கற்பகம் போல்பவனும், புகழ் நிறைந்த விண்மணி போல்பவனும், எனக்கு உயிர் ஒப்பவனும், மெய்ப்பொரு ளாயவனுமாகிய திருவொற்றியூர் மேவும் என் கண்மணியாகிய சிவனையே நினைப்பாயாக. எ.று.

     அல்லாலம் - கரிய இருள் போன்ற விடம். அல் - கருமைக்கும் இருட்கும் பொது. ஆலத்தைத் தான் உண்டு பெறற்கரிய அமுதத்தைத் தேவர் முதலிய பிறர்க்கு அளித்து அமுதத்தினும் அருமை சான்ற அமுதாய்ச் சிறக்கின்றமை பற்றி “ஆரமுது” என்றும், நினைத்தற்கும் மொழிதற்கும் ஓவத் தெழுதுதற்கும் ஆகாத பொருளாதலால் “அற்புதம்” என்றும் கூறுகின்றார். கயிலை மலையின் தென்பகுதியில் உள்ளது கல்லால மரம்; இதன் கீழிருந்து சீகண்டருத்திரராய் முனிவர் நால்வர்க்கு அறமுரைத்த சிவனை “கல்லால நீழலமர் கற்பகம்” என்று குறிக்கின்றார். சொல் - புகழ். விண்ணில் விளங்கும் மணி, விண்மணி; கண்ணிற் காண நிற்கும் கருமணி, கண்மணி என அறிக.

      இதனால், கருதுதற்குரியது ஒற்றியூர்க்கண் கோயில் கொண்டருளும் சிவபரம்பொருள் எனக் கட்டுரைத்தவாறாம்.

     (5)