1279. கருதாயோ நெஞ்சே கதிகிடைக்க எங்கள்
மருதா எழில்தில்லை மன்னா - எருதேறும்
என் அருமைத் தெய்வதமே என்அருமைச் சற்குருவே
என்அருமை அப்பாவே என்று.
உரை: எங்கள் திருவிடை மருதனே, அழகிய தில்லை வேந்தே, எருதினை இவர்ந்திருளும் எனது அருமைத் தெய்வமே, எனக்கு அருமையான சற்குருவே, எனக்கு அருமை வாய்ந்த அப்பாவே என்று, உயர்கதி எய்தும் பொருட்டு நெஞ்சமே, நீ நினைக்க மாட்டாயோ, கூறுக. எ.று.
திருவிடை மருதூரில் கோயில் கொண்டிருப்பது பற்றிச் சிவனை, “மருதா” என்பது வழக்கமாயிற்று. தில்லைப்பதியில் அருளரசனாய் இலங்குதலால், “தில்லைமன்னா” என்று கூறுகின்றார். தெய்வம், தெய்வதமென்றும் வழங்கும். மெய்ப்பொருளை யறிவுறுத்துவோன் சற்குரு. தந்தையாய் அருள் செய்வதால் சிவனை “என் அருமை அப்பாவே” என்று அழைக்கின்றார். கதி - பிறப்பு. கதி யெனப் பொதுப்படக் கூறுதலால் உயரிய சிவகதி கொள்ளப்பட்டது.
இதனால், சிவனுடைய திருப்பெயர் பலவும் சிந்தித்தால் சிவகதி கிடைக்கப் பெறலாம் என்பது. (6)
|