128.

    மின்னைநிகர்ந் தழிவாழ்க்கைத் துயரால் நெஞ்சம்
        மெலிந்துநின தருள்பருக வேட்டு நின்றேன்
    என்னைஇவன் பெரும்பாவி என்றே தள்ளில்
        என்செய்கேன் தான்பெறும்சேய் இயற்றும் குற்றம்
    அன்னைபொறுத் திடல்நீதி அல்ல வோஎன்
        ஐயாவே நீபொறுக்கல் ஆகா தோதான்
    தன்னைநிகர் தரும்தணிகை மணியே சீவ
        சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

உரை:

     தனக்குத் தானே நிகராகிய தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, மின்னலைப் போல மறைந்தொழியும் உலக வாழ்க்கையால் உண்டாகும் துன்பங்களால் மனம் மெலிந்து புலர்ந்தமையால் நின் திருவருளாகிய நீரைப் பருக விரும்பி நிற்கின்றேனாக, இவன் ஒரு பெரிய பாவி என நினைந்து என்னைப் புறம் பாகத் தள்ளி விடுவாயாயின், ஐயனே, என்னால் என்ன செய்ய முடியும்? தான் பெற்ற குழந்தை செய்யும் குற்றம் யாதாயினும் தாயானவள் அதனைப் பொறுத்து மறந்து விடுதல் நீதி யென்றன்றோ உலகம் கூறுகிறது? அதுபோல உலகுயிர்கட்குத் தாயாகிய நீ என்னைப் பொறுத்தருளுவது ஆகாததன்று, காண், எ.று.

     தனக்குவமை யில்லாத பெருமானாதலின், முருகன் மேவியிருக்கும் தணிகை, “தன்னை நிகர் தரும் தணிகை” என்று கூறப்படுகிறது. மழை மேகத்தின் இடையே தோன்றி நிலையின்றிக் கெடும் மின்னல் போலத் தோன்றிச் சிறிது போதில் அழிவது உலக வாழ்வாதல் கண்டு, “மின்னை நிகர்ந்தழி வாழ்க்கை” என்றும், நிற்பது சிறிது போதே யெனினும் விளைக்கும் துயர் பெரியதாய், நெஞ்சம் பொறுக்கு மளவு கடந்து வருந்தி வலி யிழந்து மெலிவது தோன்ற, “அழிவாழ்க்கைத் துயரால் நெஞ்சம் மெலிந்து” என்றும், நாப் புலர்ந்த விடத்து நீர் வேட்கை யெழுவது போல் நெஞ்சம் மெலிந்து துன்ப வெம்மையாற் புலர்ந்த போது திருவருளாய இனிய நீர் வேட்கை யுறுகின்ற தென்பாராய், “நினது அருள் பருக வேட்டு நின்றேன்” என்றும் இயம்புகின்றார். பாவ வினை செய்தோரையும் செய்வோரையும் காணின் எவர்க்கும் மனத்தில் வெறுப்புத் தோன்றுமாதலால் பெரும் பாவியாகிய என்னைக் காண்டற்கு விருப்புண்டாகாமல் காணா தொழியப் புறத்தே தள்ளி விடவே நினை வெழும்; ஆனால் தள்ளி விட வேண்டா என்பாபராய், “என்னை இவன் பெரும் பாவி என்று தள்ளில்” என்றும், தள்ளி விடின், நின் உள்ளத்தில் இரக்கம் பிறப்பிக்கும் வகையில் யாது செய்ய வல்லேன் என்பார், “என் செய்கேன்” என்றும் உரைக்கின்றார். பெரும் பாவம் செய்தவரை ஏற்று அருள் செய்யப் புகுவது மேலும் பல பாவ வினைகளைச் செய்தற்கு ஊக்குவதாகு மெனின், குழந்தைகள் செய்யும் குற்றங்களைப் பொறுத்துத் தாயர் அன்பு செய்வது அவர்கள் மேன் மேலும் குற்றம் செய்ய வேண்டு மென்னும் கருத்தாலன்று; அஃது அவட்கு அறமும் முறையுமாகும் என்றற்குத் ‘தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் அன்னை பொறுத்திடல் நீதி யல்லவோ” எனவும், தாய் போல் நீயும் உயிர்கட்குத் தாயாய்த் தலையளி செய்பவனாதலால் என் குற்றங்களைப் பொறுத்தல் வேண்டும் என்பாராய், “ஐயாவே நீ பொறுத்தல் ஆகாதோ தான்” என்றும் எடுத்து மொழிகின்றார். “தாயாகிய வுலகங்களை நிலை பேறு செய் தலைவன்” என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க.

     இதனால் வாழ்க்கைத் துயரால் மனம் வெதும்பி ஈரமின்றிப் புலர்ந்து அருள் வேண்டி நிற்கும் எனக்கு அருள் பாலிக்க வேண்டுமென முறையிட்டவாறாம்.

     (26)